இடம்பெயர்ந்தவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர்: ஜனாதிபதி

அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிறிஸ்தவ மத குருமாரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் அதேநேரம், இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களைத் தங்கவைப்பதற்கு யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் மாவடடங்களில் மேலும் மூன்று நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு மறைமாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் அடிகளார் உட்பட பல்வேறு கிறிஸ்தவ மதகுருமாரை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த உறுதிமொழிகளை வழங்கினார்.மன்னாரில் இடம்பெயர்ந்த 210 குடும்பங்கள் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்டதாகவும், ஏனையவர்கள் மிக விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான பிழையான தகவலை வெளிக்கொணர்வதாக அவர் குறிப்பிட்டார்.இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், கரிதாஸ் நிறுவனத்தின் ஊடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகள் குறித்து ஒஸ்வோல்ட் கோமிஸ் அடிகளார் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.

கரித்தாஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பாராட்டிய ஜனாதிபதி, தம்முடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவைகளை வழங்குமாறு கோரிக்கைவிடுத்தார். அத்துடன், மூன்று மாதத்துக்குத் கரித்தாஸ் அமைப்பு இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவைகள் வழங்கும் என்பதையும் கிறிஸ்தவ மதகுருமார் ஜனாதிபதிக்குக் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply