விடுதலைக்கு எதிராக நீடிக்கும் போராட்டம்- பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார் ஆசியா பீவி

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீவி(வயது 47). அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் ஆசியா பீவிக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. பீவி எந்த நாட்டிற்கு செல்வார் என்ற தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் அவருக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகள் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மதவாத அமைப்புகளும், கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. மக்கள் பெருந்திரளாக கூடி போராட்டங்களில் ஈடுபட்டு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். டயர்களை கொளுத்தி போட்டனர். போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது. பஞ்சாப் மாகாணத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளி இறுதி வகுப்பு துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. செல்போன் சேவை, இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply