முள்ளிவாய்க்கால் பகுதியில் பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகணை தாக்குதலை ஜனாதிபதி தலையிட்டு உடன் நிறுத்துக

புலிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகணை தாக்குதலை ஜனாதிபதி தலையிட்டு உடன் நிறுத்த வேண்டுமென  தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவசர கடிதம் ஒன்றை இன்று (மே. 12) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர் களுக்கு அனுப்பியுள்ளார். பல் வேறு சம்பவங்கள் காரணமாக படு காயமுற்ற 1000ற்கும் மேற்பட்ட மக்கள் இரு நாட்களுக்கு மேலாக இதுவரை எதுவித சிகிச்சையும் பெறாமல் இருப்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை உடன் எடுக்குமாறு ஜனாதிபதியை மேலும் அவர் கேட்டுள்ளார்.

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இன்று காலை 7.45 மணியளவில் முள்ளிவாய்க்கால் அரச வைத்தியசாலையில் எறிகனை விழுந்து வெடித்ததின் காரணமாக 26 நோயாளிகள் உடன் ஸ்தலத்திலும் சில நிமிடங்களின் பின் மேலும் 10 பேர் இறந்ததோடு 100 பேருக்கும் மேல் படுகாயமுற்றுள்ளார்கள் என்பதை மிக்க வருத்தத்துடன் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகணை தாக்குதலை தாங்கள் தலையிட்டு உடன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேறு சம்பவங்களிலும் படுகாயமுற்ற ஏனையோருடன் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் 2 நாட்களுக்கு மேலாக இதுவரை எதுவித சிகிச்சையும் பெறாமல் இருப்பதனால் உடனடியாக வைத்திய குழுவினை தயவு செய்து அனுப்பிவைக்கவும். இச் சம்பவம் விடுதலைப் புலிகளினால் தான் ஏற்பட்டிருந்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி
12/05/2009

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply