அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடைக்கால தேர்தல் – பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.
அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இதன்மூலம் டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும் என்பதால் மீதமுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கீழ் சபையை பறிகொடுத்தது அவருக்கான பின்னடைவாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply