மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! உச்ச நீதிமன்றம் தடை செய்யுமா? அமைச்சரவையின் நிலை என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்த செயற்பாடு உள்நாடு மட்டுமன்றி, சர்வதேச ரீதியாக பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டதன் பின்னரே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அரசியலமைப்பிற்கமைய நடைபெறும் தேர்தல் நிறைவடையும் வரை அமைச்சரவை இயங்க வேண்டும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பிரதானி சிரேஷ்ட பேராசியிர் ராஜா குணரத்ன,

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் நிர்வாக நடவடிக்கை தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய புதிய அரசாங்கம் ஒன்றை நியமிக்கும் வரை எந்த முறையில் செயற்படுவதென்பது அரசியலமைப்பின் 19 சரத்தின் 47 (1) பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது காணப்பட்ட அமைச்சரவை தொடர்ந்து இயங்கும் என அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த அமைச்சரவை தேர்தல் ஒன்றை நடத்தும் வரை நடத்தி ச்செல்ல முடியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்து, வழக்கிற்கு செல்ல முடியாது. அரசியலமைப்பு சட்டம் அல்லது வேறு சட்டத்தில் அடிப்படை உரிமை மீறல் அல்லது நாடாளுமன்றத்தை கலைத்தமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டிருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.

அரசியலமைப்பிற்கமைய உரிமை மீறப்பட்டிருந்தால் மாத்திரமே உச்ச நிதிமன்றத்திற்கு நேரடியாக செல்ல ஒரே வழி உள்ளது.

முக்கிய அடிப்படை உரிமைகள் என்ன என்பது 10 ஆம் சரத்தில் இருந்து 14 ஆம் சரத்து வரை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து வெளியிடும் சுதந்திரம், தேர்தல் சுதந்திரம் ஆகியவைகளே அதிலுள்ளது. அதில் நாடாளுமன்றம் கலைப்பது குறித்து இல்லை. இதனால் எந்த குடிமகனும் உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது. ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply