ஹர்த்தாலுக்கான அழைப்பு

யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையுயர்வு இருப்பதாகவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்கள், மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கை பார்த்ததே வரலாறாக இருக்கின்றது. ஈ.பி.டி.பி. ஆகிய நாம் வேடிக்கை பார்க்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாகப் பொருட்கள் தட்டுப்பாட்டையும் அதீத விலையுயர்வையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். உணவுப் பொருட்கள், கட்டுமாணப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றைத் தாராளமாக யாழ். குடாநாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்தோம். அதுவும் கொழும்பு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் பாடுபட்டோம்.

உள்நாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், பொருட்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் நாங்கள் எடுத்த பெரும் முயற்சியை மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் பொருட்களைக் கொண்டுவரும் பயணமார்க்கத்திலும், ஏற்றி இறக்கும் பணிகளிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் நீண்டகாலத் தேவையை மனதில் கொண்டு பெருந்தொகையான பொருட்களை யாழ். குடாநாட்டுக்கு அனுப்பிவைப்பதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம்.

யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையை மூடி புலிகள் தடுத்து நின்றபோதும் கடல் மார்க்கமான பயணத்தினையும் தாக்குவோம் எனப் புலிகள் அச்சுறுத்தியிருந்த போதும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்கான தேவைகளுக்கு முன்னுரிமையளித்து நாம் மக்களுக்காகச் செயற்பட்டோம். நியாயமானதும், சாத்தியமானதுமான எமது இந்த முயற்சிக்கு, ஜனாதிபதி உட்பட்ட அரச நிர்வாகத்தினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். இத்தகைய நெருக்கடி மிகுந்த நேரத்தில் புலிகள் இன்று (22.10.2008) இரண்டு உணவுக் கப்பல்களைத் தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட இரு கப்பல்களிலும் அரிசி சீனி கட்டடப் பொருட்கள் சீமெந்து ஆகிய பொருட்களே ஏற்றி வரப்பட்டிருந்தன. அதுவும் அரிசியைக் கொழும்பு விலையில் கிடைக்கச் செய்வதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புலிகளின் இந்த உணவுக் கப்பல்கள் மீதான தாக்குதலானது எவ்வகையிலும் இராணுவ நோக்கம் கொண்டதல்ல. இது முழுக்க முழுக்க யாழ். குடாநாட்டு மக்களின் உணவு அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அபிவிருத்தியை இலக்கு வைத்த தாக்குதலாகும். மக்களைப் பட்டினி போடுவதன் ஊடாகவும், அபிவிருத்தியைத் தடுப்பதன் ஊடாகவும் புலிகள் தமது யுத்தப் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கவே முயற்சிக்கின்றனர்.

வன்னிக்குள் யுத்தம் வீச்சடைந்து வருகையில், அங்கிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற விடாமல், அவர்களை ஆயுத முனையில் தடுத்து நிற்கும் புலிகள் அவர்களின் அவலங்களைக் காட்டி ஆதாயம் தேடவும் முயற்சிக்கின்றனர். இன்று உணவுக் கப்பலைத் தாக்கிய புலிகள் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னர் வன்னியில் அவலப்படும் மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியைத் தாக்கும் நோக்கத்தில் ​ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இந்தச் சம்பவங்கள் புலிகளின் தொடர்ச்சியான மக்கள் விரோதச் செயல்களின் அண்மைய சாட்சியங்களாக இருக்கின்றன. புலிகள் அழிவு யுத்தத்துக்கு வழிகாட்டி வருவதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். இன்று புலிகள் காட்டிய அழிவுப் பாதை, அவர்களின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது. அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மக்களைக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருப்பதும் மக்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தடுப்பதும் புலிகள் நடத்தும் மக்கள் விரோத பயங்கரவாதத்தின் ஒரு யுக்தியாக இருக்கின்றது.

மக்களே! புலிப் பயங்கரவாதத்தின் இந்த அழிவுப் பாதையிலிருந்து நாம் விடுபட வேண்டும். புலித்தலைமை தமக்குத் தாமே வெட்டிய புதைகுழியில் மக்களையும் பலியிடத் துணிந்துவிட்டது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. புலிகளின் இத்தகையை பாசிச மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்ப்போம். எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்ட உரத்துக் குரல் கொடுப்போம். எமது கண்டனத்தை வெளிப்படுத்த, வன்முறையைக் கையில் எடுக்காமல் ஹர்த்தால் ஒன்றை அனுஷ;டிப்பதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாளைய தினம் (23.10.2008) யாழ். குடாநாட்டில் சகல பகுதிகளிலும் பூரண ஹர்த்தால் அனுஷடிப்போம். நாளையதினம் கடைகள் வேலைத்தளங்கள் திணைக்களங்கள் பாடசாலைகள் என அனைத்தையும் மூடி புலித்தலைமையின் மக்கள் விரோதச் செயலுக்கு எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை வெளிக்காட்டுவோம்!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.