புயல் நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாகியும் குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கந்தர்வக்கோட்டை பகுதியிலும் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த பொது மக்கள், அவரிடம் முறையிடுவதற்காக தொடர்ந்து சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் நாங்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்வோம். அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் வருகிறார்.

எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். இருப்பினும் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தாமலை எம்.எல்.ஏ. ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மறியலை கைவிட்ட நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லாமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் அங்கு ஓ.பன்னீர்செல்வம் வரவே, அவரது காரை பொதுமக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், குடிநீர், மின்சாரம் இல்லாதது குறித்து பொதுமக்கள் முறையிட்டனர். மேலும் எங்கள் பகுதியில் சேதமான பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை. தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர், மின்சாரம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்றார். இதையடுத்து அவர் மற்ற பகுதிகளை பார்வையிட சென்றார்.

முன்னதாக சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது, போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply