சிலை உடைப்பு நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் : முஸ்லிம் மீடியா போரம்
இலங்கை போன்ற பல்லினப் பல மத மக்கள் வாழும் ஒரு நாட்டில் இன்னுமொரு மதத்தின் சின்னங்களை சேதப்படுத்தும் நடவடிக்கை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாத ஒன்று எனவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இன்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
மாவனல்லையிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றதாக கூறப்படும் புத்தர் சிலை சேதப்படுத்தல் சம்பவம் தொடர்பில் டெய்லி சிலோனுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
யாராக இருந்தாலும் அவர் ஏற்றுள்ள மதம், அவரால் புனிதமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. இன்னுமொரு மதத்தை நிந்திப்பதைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. இஸ்லாம் மாற்று மதத்தவர்களுடன் விட்டுக் கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் வாழுமாறு வழிகாட்டுகின்றது.
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகம் மதிக்கும் மதச் சின்னமொன்றை சேதப்படுத்துவது அதனைச் சார்ந்தவர்களை ஆத்திரமூட்டும் செயல் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. சம்பந்தப்பட்ட சில இளைஞர்கள் தவறான முறையில் மதத்தின் பேரால் வழிநடாத்தப்பட்டுள்ளமை வருந்தத்தக்க ஒன்றாகும்.
குற்றம் செய்தவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு, சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே இதுபோன்ற செயல்களை எதிர் காலத்திலும் தடுக்கலாம் என்பது பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களினதும் கருத்தாகவுள்ளது.
இதுபோன்ற செயல்களும், சம்பந்தப்பட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதே இந்நாட்டில் சகவாழ்வை நிலைநாட்டுவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதானமான வழிமுறையாக இருக்கும் என கருதுகின்றோம்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தவகல்களும் இந்த பாடத்தைத் தான் கற்றுத் தருகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அவதானமாக இருப்பதன் ஊடாகவே இது போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் எமது டெய்லி சிலோனிடம் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply