பெப். 4க்கு முன்னர் வரைவு வெளிவருமென சுமந்திரன் நம்பிக்கை

அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், நவம்பர் 7ஆம் திகதி வரவிருந்த அரசமைப்பு வரைபைத் தடுப்பதற்காகவே, மஹிந்தவை பிரதமராக நியதித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

19ஆவது திருத்தத்தில் இருந்த தமது அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை அறியாதவர் போன்று இந்த நடவடிக்கைகளை செய்திருந்தாகவும் 19ஆவது திருத்தத்தில் அகற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இன்னும் தன்னுடன் இருப்பது போன்று ஜனாதிபதி செயற்பட்டு இந்த தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் சுமந்திரன் எம்.பி சாடினார்.

இந்த செயற்பாட்டின் போது தான் தமித்ழ் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று செயற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்த செயற்பாட்டில் தான் நாட்டில் பெரும் வரவேற்பு இருக்கிறதெனவும் ஆனால், இதில் சில விமர்சனங்களும் இருக்கின்றனலெனவும் குறிப்பிட்டார்.

அரசமைப்பு மீறப்படுகின்ற போது, அதை மீறப்படாத தடுக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்குத் தான் உள்ளதெனத் தெரிவித்த அவர், ஏனெனில், ஓர் அரசியல் தீர்வை தாம் எதிர்நோக்குவது, அரசமைப்பின் மூலமான ஒரு தீர்வாகுமெனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பு மூலமாக அல்லது அரசியலமைப்பு மறுசீரமைப்பு மூலமாக எழுதப்படும் தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு எழுதப்பட்ட பின்னர் அரசமைப்பு மீறப்படுமாக இருந்தால், அந்த தீர்வில் ஒரு பிரியோசனமும் இல்லாமல் போய்விடுமெனவும் அவர் குறிப்பிட்டா​ர்.

தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில், நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதென்ற நல்ல எண்ணம் உதித்துள்ளது. இது புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய பங்கை வகிக்கும். நாட்டைப் பிரிக்க முயலவில்லை. நாட்டுக்கு கேடு விளைவிக்க விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளிலே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் விலகுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகையினால், மிகத் துரிதமாக புதிய அரசமைப்பு உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபடுகின்றோம். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவரும் எனவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply