தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குற்றவாளியல்ல. அவர் இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் மாபெரும் தலைவர் என: ஸ்ரீகாந்தா
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றுக்காக, இந்தியா இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தி இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடுமானால், அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர உதவும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பூர்த்தி செய்யப்படாத நிகழ்ச்சி நிரலை முழுமைப்படுத்தி, இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஒன்றை காணமுயலும் முனைப்பை தடுக்க இந்தியா முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாசைகளை தரக்கூடிய தீர்வு ஒன்றுக்கு தாம் தயாராகவே உள்ளதாக அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தியா, இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி வன்னியில் பொதுமக்கள் பலியாவதை தடுக்க வேண்டும் என அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் கூறுவதுபோல ஒடுக்கமுடியாது என தெரிவித்த அவர், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென நிலப்பரப்பை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்டால் அது தமிழர்களை ஒடுக்குவதற்கு வாய்ப்பை வழங்கிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குற்றவாளியல்ல. அவர் இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் மாபெரும் தலைவர் என ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை விட்டு விலகுவர் என்றும் ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் பாரியபிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் கோருவதாகவும் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply