உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி? : டிரம்ப் மகள் பரிந்துரை

உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி (வயது 63) பெயர் அடிபடுகிறது. இவர், குளிர்பான நிறுவனமான ‘பெப்சி’யின் தலைமை செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலகினார்.

இவரது பெயரை உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்த தகவல்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டுவிட்டரில் இவான்கா டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், இந்திரா நூயியை ‘வழிகாட்டி, உத்வேகம் தருபவர்’ என குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி இவான்கா டிரம்ப், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின், வாஷிங்டன் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தற்காலிக தலைவர் மிக் முல்வானி ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருவதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply