இராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (18) அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்படவிருந்தது.
இந்நிலையில், குறித்த காணி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
இதனை அடுத்து, இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறித்த பகுதிக்கு தான் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் மாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply