சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைப்பு

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மண்டல, மகரவிளக்கு பூஜை சிறப்பு வாய்ந்தவை. நடப்பு சீசனை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், கடந்த 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடந்தது. தொடர்ந்து, 16-ந் தேதி முதல் தினமும் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கமான பூஜைகளுடன் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு களபாபிஷேகம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) நெய்யபிஷேகம் நடைபெறாது. ஆனால் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி நிகழ்ச்சி நடைபெறும். குருதி சடங்கு நிகழ்ச்சிகளில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி கலந்து கொள்கிறார். மாலையில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடைபெறும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி ஸ்ரீமூலம் திருநாள் ராகவவர்மா சிறப்பு தரிசனம் செய்கிறார். அதை தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ராஜகுடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply