ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வசம் மீண்டும் ஆட்சி; வரலாற்றில் இடம் பிடிக்கிறார் மன் மோகன் சிங்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது. அடுத்தடுத்து இரண்டு தடவைகள் பிரதமராகி வரலாற்றில் இடம் பிடிக்கிறார் மன்மோகன் சிங். கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 254 இடங்களில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே காங்கிரஸார் பெருமளவில் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், ஆட்டம் பாட்டத்துடனும் வெற்றியைக் கொண்டாடினர். காங்கிரஸ் அலுவலகம் உள்ள பகுதி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

நேரு குடும்பத்தவர் அல்லாத ஒருவரை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது இதுவே முதல் தரம். அத்துடன் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் அடுத்தடுத்து இரண்டுமுறை பிரதமராவது இதுவே முதற் தரம்.தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவாகி இருப்பதால் இந்திய நாடாளுமன்ற மரபுகளின்படி அக்கட்சியை ஆட்சியை ஆட்சி அமைப்பதற்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அழைப்பார் என இந்திய சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், பாஜக தலைமையகம் அமைதியாக காணப்படுகிறது. அத்வானி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் யாரும் அங்கு இல்லை. மாறாக செய்தித் தொடர்பாளர்களான பிரகாஷ் ஜாவேத்கர், பல்பீர் புஜ்ச், நஜ்மா ஹெப்துல்லா போன்ற சிலர்தான் காணப்படுகின்றனர். தாங்கள் எதிர்பார்த்தது போல முடிவுகள் இல்லை, ஏமாற்றமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் புஞ்ச்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் சில எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. நிறைய கட்சிகள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரிய அளவு இடங்கள் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது.

அதேசமயம், பாஜக வட்டாரம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு சீட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதால் பாஜக தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இம்முறை இடம்பெற்ற இந்திய லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 162 இடங்களையும், 3ஆவது அணி 84 இடங்களையும், 4 ஆவது அணி 29 இடங்களையும், ஏனைய கட்சிகள் 14 இடங்களையும் பெற்றுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply