பிடியாணை உத்தரவை விலக்கிக்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு கண்டனம்!

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை விலக்கிக்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானத்தை கண்டிப்பதாக பிரித்தானியாவை மையமாகக்கொண்ட சர்வதேச இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான நிலையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அதிகரித்து வரும் அரசியல் அழுத்தம் காரணமாக குறித்த உத்தரவை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சர்வதேச இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான நிலையம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டது. இது 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கமானது பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பித்தல்களை பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்களுக்கு முன்வைத்துள்ளது என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார்.

இருப்பினும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இராணுவப் பேச்சாளர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆகியோர், பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்ற தவறான கருத்தை மக்கள் மத்தியில் முன்வைத்துள்ளனர். இந்த செயற்பாடானது முழுக்க முழுக்க வெட்கக்கேடானது.

அத்தோடு குறித்த உத்தரவு தொடர்பில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள் நீதிமன்றத்துடன் தொடர்பு கொண்டதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

இருப்பினும் நீதிமன்ற விடயங்களில் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அலுவலகங்கள் எவ்வாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்ற தீர்ப்பில் தலையீடு செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply