ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் வெள்ளை நிறத்தில் காட்சியளித்த நதி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புகழ்மிக்க டார்லிங் நதி உள்ளது. இது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சி காரணமாக ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கி உள்ளன. நேற்று நதிக்கு அருகே உள்ள மெனின்டீ பகுதி மக்கள், நதியின் மேற்பகுதியில் மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன’ என கூறினர்.

ஆனால், சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடுமையான வெப்பநிலை ஆஸ்திரேலியாவை தாக்கி 40க்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்தன. இந்நிலையில், திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் ஆஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதேபோல், நதியில் ஆக்ஸிஜன் தட்டுபாட்டின் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெள்ளப்பெருக்கையும் சந்தித்தது. இதன் விளைவாக குயின்ஸ்லேண்டின் பிரதான டின்டிரி ஆற்றின் நீர்மட்டம் 12.06 மீட்டர் உயர்ந்தது. இது கடந்த நூற்றாண்டில் இதுவரை எட்டாத நீர்மட்டம் ஆகும். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

இதே நிலை நீடித்தால், டார்லிங் ஆற்றில் எஞ்சியிருக்கும் மீன்கள் இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply