ஜனாதிபதிக்கு விமானநிலையத்தில் வரவேற்பு

ஜோர்தானுக்கான விஜயத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பல்வேறு அரசியல் வாதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலர்மாலையணிவித்து வரவேற்பளித்துள்ளனர். விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற நற்சொய்தியுடனேயே தான் நாடு திரும்புவேன் என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஜோர்தானில் நடைபெற்ற ஜீ-11 மாநாட்டில் கூறியிருந்தார்.

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முற்றாக நாடு விடுவிக்கப்பட்டதென்ற செய்தியுடனேயே தான் நாடுதிரும்பப் போவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்குப் பல்வேறு அரசியல்வாதிகள் மலர்மாலையணிவித்து வரவேற்பளித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்காகவே ஜனாதிபதி தனது ஜோர்தான் விஜயத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பியதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கப் படைகளின் மோதல் உத்தியோகபூர்வமாக நிறைவடைகிறது என்ற செய்தியை நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி ஊடகங்கள் மூலம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பு நகரில் அனைத்துப் பகுதிகளிலும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருப்பதுடன், வீதிகளுக்குக் குறுக்காவும்; தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

புறக்கோட்டைப் பகுதியிலுள்ள கடைத்தொகுதிகளுக்குச் சென்ற பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகளில் தேசியக் கொடிகள் கட்டப்படவேண்டுமெனப் பணிப்புரை வழங்கிச் சென்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply