பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் முற்றாக வெளியேற்றம்; புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிப்பு
வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து மக்கள் முற்றாக வெளியேற்றப் பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. புலிகள் இன்று காலையில் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஏப்ரல் 20-23 வரையிலான காலப்பகுதியில் புதுமாத்தளான் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறிய பின்னர், புலிகளின் பிடியிலிருந்த எஞ்சிய பகுதிகளில் மேலும் ஒரு இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக நம்பப்பட்டது.
எனினும், இந்தப் பகுதியில் சுமார் 50,000 வரையிலான பொதுமக்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையும், 15-20 ஆயிரம் பொதுமக்களே அங்கு எஞ்சியிருப்பதாக இலங்கை அரசாங்கமும் கூறிவந்தது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 36,000 பேரை மீட்டிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் மீட்கப்பட்டுவிட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் பின்னர் அறிவித்தது.
மோதல்கள் முடிவுக்கு வருவதாகவும், இறுதி வெற்றி அண்மித்துவிட்டதாகவும் படைத்தரப்பு அறிவித்ததையடுத்து, ஜோர்டான் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு அவசரமாக நாடு திரும்பினார்.
நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு கட்டுநாயகா விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு மத வழிபாடுகளும் நடத்தப்பட்டன. இறுதி வெற்றிச் செய்தியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் இனி வெளியிடலாம் என்றும், வெற்றி அறிவிக்கப்படும் தினம் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்படுவதுடன், தேசிய சுதந்திர தினமாக ஒவ்வொரு வருடமும் அந்நாள் நினைவுகூரப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிப்பு!
மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்ட நிலையில் மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இன்று காலையில் நந்திக்கடல் வழியாக மேற்கொண்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக படைத்தரப்புக் கூறியுள்ளது.
புலிகளின் இன்னமும் நிலைகொண்டுள்ள பகுதியில் நேற்று பல குண்டுவெடிப்புக்கள் அவதானிக்கப்பட்டதாகவும், இது பாரிய தற்கொலை முயற்சிகளா அல்லது தமது தளபாடங்கள், ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்று தெரியவில்லை என்றும் படைத்தரப்பு முன்னதாகக் கூறியிருந்தது. தற்சமயம் இந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பான செய்திகள் இதுவரையில் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply