இனரீதியான மோதல்கள் ஏற்படாது தடுக்கப் பொலிஸார் உஷார்நிலையில்

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்த பயங்கரவாதச் செயற்பாடுகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனரீதியான மோதல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையற்ற அசம் பாவிதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்;கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமையானது ஒரு பகுதி மக்களுக்கு மாத்திரம் கிடைத்தவெற்றியல்ல, அனைவருக்கும் கிடைத்தவெற்றியெனக் குறிப்பிட்ட பொலிஸ்மா அதிபர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றொருநபரை துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தெரிவித்தார்.

இனரீதியான மோதல்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்குப் பொலிஸார் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.“சிலவேளைகளில் சிலர் தமது தேசப்பற்று உணர்வை அதிகமாக வெளிக்காட்ட முயலும்போது சில சம்பவங்கள் ஏற்படலாம். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நகைக்கடைகள் போன்ற உடைத்து பெறுமதிவாய்ந்த பொருள்களைக் களவாட முயற்சிக்கலாம். கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன” என்றார் அவர்.

“சிங்களவரோ, தமிழரோ அல்லது முஸ்லீமோ எவராவது சட்டத்தை மீறி இனரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட வெற்றியைப் பலர் வீதிகளில் இறங்கி பட்டாசுகள் கொழுத்திக் கொண்டாடிவருகின்றனர். எனினும், இந்தக் கொண்டாட்டங்கள் சட்டத்தை மீறும் வகையிலோ அல்லது மற்றயவரைப் பாதிக்கும் வகையிலோ அமையக்கூடாது எனப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாகவும், தமிழர்கள் பலர் வெட்டப்படுவதாகவும் வெளிநாடுகளில் நேற்று திங்கட்கிழமை வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இதனால் அச்சமடைந்த புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் இலங்கையிலுள்ள தமது உறவினர்களைத் தொடர்புகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply