பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சிபிசிஐடி போலீசார் சம்மன்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அதனடிப்படையில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(28), கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும், நகர மாணவரணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து பார் நாகராஜ் நேற்று மாலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். கைதான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேருக்கும், பார் நாகராஜூக்கும் உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது. மாலை 5 மணி இரவு 9 மணி வரை 4 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வெளியே வந்த பார் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனை தாக்கியது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் முழு பதிலையும் அளித்துள்ளேன்.
என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை சொல்ல முடியாது. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்மன் அனுப்பப்பட்டவர்களில் மற்றொருவரான தென்றல் மணிமாறன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் தண்டபாணி தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் வழங்கினர். பின்னர் வக்கீல் தண்டபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3 மணிக்கு மணிமாறன் வீட்டுக்குச் சென்று சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் வருகிற 25-ந் தேதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறி இருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply