சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகை : விமானங்கள் தரையிறக்கம்
ஆஸ்திரேலியாவில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை, கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கட்டுப்பாட்டு கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் பணிகள், மெல்போர்னில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. வெளியில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. சிட்னி வந்த விமானங்கள் கான்பெரா மற்றும் மெல்போர்னுக்கு திருப்பி விடப்பட்டன.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் கோபுரத்தில் ஏறி புகை வந்த பகுதியை சோதனை செய்தனர். அப்போது கம்ப்யூட்டர் பேட்டரி பேக்-அப் சிஸ்டத்தில் அதிக வெப்பம் காரணமாக புகை வெளியானது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி பேட்டரி குளிர்விக்கப்பட்டது. உடனடியாக புகை கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதால், மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் செயல்பாட்டுக்கு வந்தது. ஊழியர்கள் அனைவரும் அங்கு பணிக்குத் திரும்பியதும், அனைத்து கம்ப்யூட்டர்களையும் இயக்கி சோதனை செய்தனர். அதன்பின்னர் 1.30 மணிக்கு அனைத்து விமானங்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால் அங்கு 2 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply