துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை: திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம்
வேலூர் மாவட்டம் காட்பாடி – காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதனுடன் அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரிதுறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, சி.பிஎஸ்.இ பள்ளியில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply