‘மிஷன் சக்தி’ சோதனை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பாதிக்கும் : நாசா அறிவிப்பு
விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இந்த தகவலை கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும். அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது’ என கூறியிருந்தது.
இந்நிலையில் நாசா ஊழியர்கள் மத்தியில் விஞ்ஞானி ஜிம் பிரிடென்ஸ்டின் பேசியதாவது:
ஏவுகணை சோதனையின் போது இந்தியா சுட்டு வீழ்த்திய செயற்கைகோள் 400 துண்டுகளாக உடைந்து விண்வெளியில் மிதக்கிறது. அவற்றில் 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மீ அளவு கொண்டவை.
அவற்றில் 24 துண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வட்ட பாதையில் மிதக்கிறது. அது மிக மிக ஆபத்தானது. ஒரு நாடு இப்படி செய்தால், பிற நாடுகளும் இதேபோல் செய்ய தொடங்கும். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது போன்று சோதனையினால் என்ன பலன் என்பதை கூறுவது அவசியமாகும். எதிர் காலத்தில் இத்தகைய நடவடிக்கை ஒத்துக்கொள்ள கூடியவை அல்ல. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நாசா ஆராயும்.
இதற்கிடையே தாக்கி நொறுக்கப்பட்ட இந்திய செயற்கைகோளின் துண்டுகள் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் செயற்கை கோள்களின் மீதும் மோதும் அபாயம் உள்ளது என அமெரிக்க ராணுவம் கணித்துள்ளது.
விண்வெளியில் இதுவரை 23 ஆயிரம் பொருட்கள் 10.செ.மீ அளவில் மிதந்து கொண்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் கண்டு பிடித்துள்ளது. அதில் 10 ஆயிரம் துண்டுகள் செயற்கைகோளின் துண்டுகளாகும். இவற்றில் 3 ஆயிரம் துண்டுகள் மட்டும் கடந்த 2007-ம் ஆண்டு சீனா நடத்திய செயற்கைகோள் எதிர்ப்பு சோதனையின் போது உருவானது.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பூமியின் மேலே மிகக்குறைந்த அளவிலான துண்டுகளே உள்ளன. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை. காலப்போக்கில் தானாக மறையும் என்பது தான்.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக தான் உள்ளது. இருப்பினும் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் நாங்கள் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply