‘2019 பட்ஜட்’ இறுதி வாக்கெடுப்பு இன்று
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5.00மணிக்கு நடைபெறுகிறது. கடந்த மார்ச் 05ஆம் திகதி 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 25நாள் விவாதத்தின் பின்னர் பரபரப்பான சூழ்நிலையில் இன்றைய வாக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த மார்ச் 12ஆம் திகதி நடைபெற்றதோடு, 43மேலதிக வாக்குகளினால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.ஆனால் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற இரு அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடுகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இன்றைய வாக்கெடுப்பு தொடர்பில் முழு நாடும் ஆவலாக எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட இருந்த போதும் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக இடைக்கால வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர எஞ்சிய காலப்பகுதிக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். மார்ச் 6முதல் 12ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு ஆதரவாக 119வாக்குகளும் எதிராக 76வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக த.தே.கூ, இ.தொ.கா என்பனவும் வாக்களித்திருந்தன.ஜனாதிபதிக்கு ஆதரவான சு.க எம்.பிக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.
அதன் பின்னர் மார்ச் 13முதல் ஏப்ரல் 5வரை 19நாட்கள் குழு நிலை விவாதம் நடத்த காலம் ஒதுக்கப்பட்டது. இதில் மார்ச் 28ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு என்பன மீதான வாக்கெடுப்புகள் எதிர்பாராத வகையில் தோற்கடிக்கப்பட்டன. ஆளும் தரப்பில் குறைந்தளவு எம்.பிக்களே சபைக்கு சமுகமளித்திருந்த நிலையில் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிராக 48வாக்குகளும் ஆதரவாக 20வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்று நிதி அமைச்சு மீதான விவாதம் நடைபெற இருப்பதோடு இதுவரை நடைபெற்ற விவாதத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு எம்.பிக்கள் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் நிதி அமைச்சர் இன்று பதில் வழங்கவுள்ளதுடன் வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பில் திருத்தங்களையும் முன்வைக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து இறுதி வாக்கெடுப்பு மாலை 5.00மணிக்கு இடம்பெறும். பின்னர் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது.
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இம்முறையும் த.தே.கூ அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் அதே அளவு வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஏனைய கட்சிகளின் உதவியுடன் இறுதி வாக்கெடுப்பை தோற்கடிப்பதாக எதிரணி கூறி வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply