ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை
சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர். இதையடுத்து, அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்தது. எனினும் குறுகிய காலத்திலேயே ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்ற தொடங்கிவிட்டனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவன பகுதியான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமாடியில் உள்ள அல்-ரசாசா என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்த தகவலை உறுதிப்படுத்திய ஈராக் ராணுவம், சுலைமான் அகமது முகைதின் கடந்த காலங்களில் அன்பர் மாகாணத்தில் எண்ணற்ற உயிர்களை பலிகொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என தெரிவித்தது. எனினும் இந்த சம்பவம் குறித்து ஐ.எஸ். பயங்கர வாத இயக்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply