8 நாட்களின் பின் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம்
கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 நாட்களாகின்றன. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட தினம் முதல், தேவாலயம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் பாதுகாப்பு பிரிவினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவாலயத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது.
இதற்கமைய, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நேற்று ஊடகவியலாளர்கள் சென்றிருந்தார்கள்.
குறிப்பாக தேவாலயத்தின் வெளிபுறம் சற்று சேதமடைந்துள்ள போதிலும், தேவாலயத்தின் உட்புறம் முழுமையாக சேதமடைந்துள்ளதை அங்கு சென்ற ஊடகவியலாளர்களால் காணமுடிந்தது.
குறிப்பாக சுவர்கள் சேதமடைந்துள்ளதுடன், குண்டு வெடிப்பினால் சுவர்கள் உடைந்துள்ளது. அத்துடன், தேவாலயத்தின் கூரையும் சேதமடைந்திருந்ததுடன், தேவாலயத்தின் கீழ் பகுதியும் சேதமடைந்துள்ளது.
இலங்கை கடற்படையின் முழுமையாக ஒத்துழைப்புடன், புனித அந்தோணியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுவர்கள் சற்று சேதமாக்கப்பட்டு, புதிதாக சுவர்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, தேவாலயத்திற்குள் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சுவாசிப்பதற்கு சற்று சிரமமாக நிலைமையும் காணப்பட்டது.
பாதுகாப்பு பிரிவினர், ஒரு வகை திரவ மருந்தை கொண்டு சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்தமையினால், முக கவசம் இன்றி சென்ற எமக்கு அதன் தாக்கம் இருந்தது.
மக்களுக்கு தேவாலயத்தை விரைவில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்திற்குள் சென்ற எமக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது.
பல உயிர்களை காவுக் கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், தேவாலயத்தின் முழு கட்டிடமும் சேதமடைந்துள்ள போதிலும், அங்குள்ள இயேசுவின் சிலைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply