நாட்டை மீட்ட முப்படையினருக்கு அமைச்சர் முரளீதரன் பாராட்டுக்களைத் தெரிவித்தார்
விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்ட முப்படைகளுக்கும், பொலிஸ், ஊர்காவற்படை வீரர்கள், மற்றும் சிவில் அமைப்புகளுக்கும் மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத் திடலில் நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் சிங்களத்தில் உரையாற்றிய அமைச்சர் தொடர்ந்து தமிழில் உரையாற்றினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரபாகரன் கொல்லப்பட்டதன் பிற்பாடு பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. அது அவருடைய உடல் தானா என்கின்ற ஒரு கேள்வி எழுந்திருந்தது. எனவே மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவரது உடலைச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தும் படி கேட்டிருந்தார்.
அங்கு நாம் சென்று பார்த்த போது அது அவரின் உடலாகவே இருந்தது. இதனையடுத்து அங்கு ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “அந்த உடலை நீங்கள் முதல் முதலாகப் பார்த்த போது எவ்வாறு இருந்தது என்று?”
அத்தருணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தேன். அந்த ஒரு தனி மனிதனுக்காக நாங்கள் எத்தனை உயிர்களையும், உடைமைகளையும் பறிகொடுத்து விட்டோமென.
அவர் கொல்லப்பட்ட தினத்துடன் பயங்கரவாதம் பூண்டோடு ஒழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டு மக்கள் அனைவரும் இன்று பயம் , பீதி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களிடையே சில சந்தேகங்கள் இருக்கின்றது. இதன் பிற்பாடு நம்மவரின் நிலை என்னவாக இருக்கும் என வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கூறினேன்,
” நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ இல்லையோ எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டுமென்று. ஏனென்றால் அனைத்து மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் அறிந்து செயற்படுகின்ற ஒரு மாபெரும் தலைவனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்ந்து வருகின்றார்.
அது மாத்திரமன்றி ஒரு துணிச்சல் மிக்க, சிறப்புமிக்க, சர்வதேச நாடுகள் போற்றுகின்ற ஒரு தலைவராக ஜனாதிபதி திகழ்ந்து வருகின்றார். அவருடைய இந்த உறுதியான , திடமான முடிவின் காரணமாகத்தான் இன்று பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று நாட்டின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். ஆகவே அந்த உத்தம தலைவருக்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
பிரபாகரனின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மக்களின் மனநிலை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அம்மக்களிடமிருந்து பிரிக்கப்பட்ட பல சிறார்கள் பிரபாகரனால் களமுனைகளில் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று அவர்கள் வேதனையுடன் வாழ்கிறார்கள். அம்மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
மீள் குடியேற்றங்களின் பின்னர் அங்கு தேர்தல் இடம்பெற்று அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருட போராட்டங்களின் போது பிரபாகரனால் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இறுதியாக நாங்கள் பெற்றுக் கொண்டது ஒன்றுமே இல்லை.
ஆகவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள் நாடாளுமன்ற பலத்தைக் கூட்டினோமாகில் அதுவும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தோமானால் தமிழர்களின் பிரதேசங்கள் பாரிய வளர்ச்சியடைந்திருக்கும். கடந்த காலங்களை மறந்து, அவற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, எமது நாடாளுமன்ற பலத்தை கூட்டி வெற்றியடைவோம்” எனக்கூறி விடைபெற்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply