முடி சூடும் முன் தனது பாதுகாவலரை ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்
தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் என்றே அழைக்கின்றனர். இவர் வரும் சனிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ மன்னராக முடிசூடி அரியணை ஏறவுள்ளார்.
இவருக்கு புத்தம் மற்றும் பிராமண முறைப்படி முடிசூடும் விழாக்கள் கொண்டாடப்படும் எனவும் முடிசூடிய மறுநாள் மாபெரும் அணிவகுப்பு நடத்தப்படும் எனவும் மன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வஜிரலங்கோன், கடந்த 2014ம் ஆண்டு சுதிடா டித்ஜாய் என்ற பெண்ணை அவரது தனிப்பட்ட பாதுகாப்புப்படையின் துணை தலைவராக நியமித்தார். அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு துணை பாதுகாவலராகவும் நியமித்தார்.
சுதிடா ஏற்கனவே தாய் ஏர்வேஸில் விமான உதவியாளராக பணி புரிந்தவராவார். தாய்லாந்து ஊடகங்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக பல நாட்களாக கூறி வந்தன. ஆனால் மன்னர் தரப்பில் இந்த செய்திகள் தொடர்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஊடகங்களில் பரவிய செய்திகள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் மன்னர் வஜிரலங்கோன், சுதிடாவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.
இதையடுத்து நேற்று காலை தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன், சுதிடாவை திருமணம் முடித்தார். அதன் பின்னர் சுதிடாவை தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ ராணியாகவும் அறிவித்தார். இந்த திருமண விழாவில் நடந்த நிகழ்ச்சிகள், கோலாகலங்கள் தாய்லாந்து ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply