ஏ-9 வீதி விரைவில் திறக்கப்படும்; புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி: நெடுஞ்சாலைகள் அமைச்சர்

யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியை மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் பீ.பீ.எக்கநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் ஏ-9 வீதி மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்படுமெனவும், தற்பொழுது யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் இராணுவத்தினரும், யாழ்ப்பாணத்துக்கான பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுமே ஏ-9 வீதியூடாகத் தற்பொழுது பயணிப்பதாக என்று அமைச்சர் கூறினார்.

ஏ-9 வீதி மூடப்பட்டிருப்பதால் குடாநாட்டு மக்களுக்குப் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதால் அதனை உடனடியாகப் புனரமைக்குமாறு ஜனாதிபதி தமக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், இந்த உத்தரவுக்கமைய வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் ஏ-9 வீதியை மக்கள் பாவனைக்குத் திறந்துவிடமுடியும் எனவும் அமைச்சர் பீ.பீ.எக்கநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

அதேநேரம், மன்னார்-பூநகரி ஊடான ஏ-32 வீதியின் புனரமைப்பு நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் நிலையை எட்டியிருப்பதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. ஏ-9 வீதிக்கு முன்னர் ஏ-32 வீதியே மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்படும் எனவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கான ஏ-9 வீதி எப்பொழுது திறக்கப்படும் எனத் தென்பகுதியிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் தென்பகுதிக்குமிடையில் ஒரேயொரு விமான நிறுவனமே தற்பொழுது விமான சேவையில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் விடுதலைப் புலிகளிடமிருந்து அனைத்துப் பகுதியும் மீட்கப்பட்டிருப்பதால் ஏ-9 வீதி விரைவில் திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply