மோடி பதவி ஏற்பு விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினர் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவ விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கி அழித்தன.
உயிரிழந்த 40 பாதுகாப்பு வீரர்களுக்கு நாடுமுழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டன. அவர்களின் குடும்பத்தினர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதற்கிடையே இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள். மேற்குவங்காள மாநிலம் நாடியாவை சேர்ந்த ராணுவ வீரர் சுதீப் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தார். அவருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுதீப்பின் தாயார் மம்தா பிஸ்லாஸ், டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். சுதீப்பின் தந்தை உடல்நிலை குறைவால் பங்கேற்கவில்லை. இதே போல புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மற்றொரு வீரரான மேற்கு வங்காள மாநிலம் ஹவ்ரக்சை சேர்ந்த பப்லூ சாந்த்ராவின் குடும்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் பஞ்சாப், இமாச்சலபிரதேச மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் குடும்பத்தினர் தங்களுக்கு மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம் என்றும் தெரிவித்தார்.
மோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் மோடி விழாவில் பங்கேற்க இருப்பதாக மம்தாபானர்ஜி அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 56 பேர் அரசியல் படுகொலை செய்யப்பட்டதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இங்கு அரசியல் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் என்னை உங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தடுத்து விட்டது’ என்றார்.
இதற்கிடையே தான் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா தரப்பில் கூறும் போது, ‘உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பெருமை அளிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் உயிர் தியாகத்தை மோடி அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அரசியல் சாயம் பூச முயலும் மம்தா பானர்ஜிக்கு பதிலடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply