இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கு : வீ. ஆனந்தசங்கரி
இந்திய மத்திய அரசு உடனடியாக யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேசுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதிர்ச்சி தருவதோடு இலங்கை தமிழ் மக்களுக்குக்கூட ஏற்புடையதல்ல. இத் தீர்மானம் இந்திய அரசுக்கே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். இலங்கை பாராளுமன்றத்தில் இத்தகைய முறையற்ற தலையீட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற அதிக நேரம் எடுக்காது என்பதை இத் தீர்மானத்தை ஆதரித்தவர்கள் உணரத் தவறியது பரிதாபத்துக்குரியதாகும்.
உள்நோக்கம் கொண்ட கடும் போக்காளர்களை திருப்திப் படுத்துவதற்காகவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை துரதிஷ்டவசமானதோடு இந்தியாவின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும் பெரும் பாதகமாக அமையும். இத்தீர்மானத்தை ஆதரித்தவர்கள் இலங்கை இனப்பிரச்சனை சம்பந்தமாக எதுவும் தெரியாதவர்களால் தப்பாக வழிநடத்தப்பட்டுள்ளோம் என மிகவும் வருந்த நேரும். இத் தீர்மானத்தைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதை ரத்துச்செய்ய விரைவில் சட்டசபையை கூட்டுவரென நம்புகிறேன். இதுவரை 20 வருடங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த கௌரவ ப.சிதம்பரம் அவர்களைத் தவிர வேறுஇருவர் மட்டுமே இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துவிட்டு நாடு திரும்பியவர். அடுத்தவர் விடுதலைப் புலிகளின் பினாமிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பாராளுமன்றத்தில் உணவு அருந்திவிட்டு நாடு திரும்பியவர் ஆவர். ஆகவேதான் சர்வகட்சி குழுவொன்று உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வருகைத் தர வேண்டுமென நான் வற்புறுத்தி வருகிறேன்.
இலங்கைத் தமிழராகிய நாம் எமது இனப்பிரச்சினை தீர்;வதற்கு தமிழ்நாடு நட்புறவோடு ஆலோசனை வழங்குவதையும், ஏனைய உதவிகள் புரிவதையும் வரவேற்கிறாம். ஆனால் தமிழ்நாடு, உள்நோக்கோடு செயற்படும் ஒரு சில விடுதலைப் புலிகள் சார்பான, முன் யோசனையற்ற, நிலைமையை சரியாக விளங்காத, போதிய ஆதாரமில்லாத தலைவர்களின் தப்பான வழிநடத்தலுக்கு அமைய செயற்படுமேயானால் தமிழ் நாடு அமைதியாக ஒதுங்கியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடிய மக்களுடன் 50 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சிங்கள, இஸ்லாமிய மக்களோடு சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்கின்றனர். அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஒன்றாக உண்டு விளையாடி சொந்தமாக வீடுகள் வைத்துக் கொண்டு, புதிதாக பெரும் வீடுகள் வாங்கிக் கொண்டும் வாழ்கின்றார்கள். அண்மைக் காலத்தில் உணர்வுகளைத் தூண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பேசப்பட்ட பேச்சுக்கள் அவ்வாறு வாழும் தமிழ் மக்களுக்கு பெரும் மனசங்கடத்தை உண்டுபண்ணியதோடு சிங்கள மக்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளின் கொடூரமான செயல்களால் அப்பகுதிகளில் பல அப்பாவிகள் இறந்தும், சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்து அமைதியாவும், சமாதானமாகவும் வாழ்கின்றார்கள். தமிழ்நாட்டில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தாமல் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுவதாக அமைய வேண்டும். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரச்சினை தீர்வுக்கு உதவாமல் பிரச்சினை விரிவடையவே உதவுகிறது.
ஆர்ப்பாட்டங்கள், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், ஹர்த்தால் போன்ற பல நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடந்தேறி, இந்திய மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் ஈடுபட வேண்டுமென வற்புறுத்தும் தீர்மானங்கள் எதிர்பார்த்ததற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. புலி சார்பான இலங்கை-இந்திய தலைவர்களின் பேச்சுக்கள் மத்திய அரசை சுதந்திரமாக செயற்பட விடாது தடுத்துள்ளது. வேறு தலையீடு இன்றி செயற்படின் இந்தியா எவரையும் நோக வைக்காது பிரச்சினையை அணுகியிருக்கும். பின் விளைவுகள் எதுவென அறியாது விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட இரு தலைவர்கள் சினிமாத் துறையினரின் உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தபின் சென்னையில் அவர்களுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தம் மக்களின் சக்தியுள்ள ஒரு பகுதியினர் ஓர் விடயம் சம்பந்தமாக தலையிடுமாறு வற்புறுத்துகின்றார்கள் என்ற காரணத்தால் இப் பெரிய நாடு கண்ணை மூடிக்கொண்டு குதிக்க முடியாது. முதலாவதாக அந்த சாராரின் கோரிக்கை நியாயமானதா என்பதையும், தலையிடுவதை நியாயப்படுத்த முடியுமா என்பதையும் அறிந்தே செயல்படும். தலையிடுவது நீதியானது எனத் தோன்றினாலும் அது ஓர் ஆலோசனை வழங்க மட்டும் உரிமை கொண்டதாக இருக்குமே அன்றி எந்தவொரு நாட்டின் இறைமையில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்த்துக் கொள்ளும். இந்தியா தன்னிடமுள்ள பரந்த புலனாய்வுத் துறை மூலமாக உலகில் எதையும் அறியும் சக்தியும் ஆற்றலும் இருப்பதால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை யாரும் கூறி அறியத் தேவையில்லை. ஆகவே இந்திய அரசிடம் விடப்படும் பல்வேறு கோரிக்கைகளை தன் சொந்த கணிப்பீட்டுக்கு அமையவே அணுகும் என்பதே உண்மை.
இலங்கை இனப்பிரச்சனை 50 ஆண்டுகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகும். விரைவில் தீர்வுக்குரிய அறிகுறிகளும் இல்லை. சோல்பரி அரசியல் திட்டத்தின் 29-வது சரத்தை மீறி நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் பிரச்சனை தொடங்க காரணமாக இருந்தது. நீண்ட இந்த 50 ஆண்டு காலமாக நான் இலங்கையில் வாழ்ந்தவன். எவர் எவரால் தவறுகள் நேர்ந்தது என்பதை நன்றாக அறிந்தவன், எவ்வாறு பூமியில் ஓர் சொர்க்கத்தை இழந்தோம் என்பதையும் அறிந்தவன் இன்றைக்குள்ள நிலைமைக்கேற்பவே பிரச்சினையை அணுக வேண்டும். நான் யாருக்கும் முகவராகவோ அல்லது எடுபிடியாகவோ செயற்படவில்லை. நான் கூறுவதெல்லாம் உண்மையே அன்றி வேறு எதுவும் இல்லை. எனது நாணயத்துக்கு யாரும் சவால் விடலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரே இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும், அக் கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்றார். இந்தியா இனப்பிரச்சினை கையாண்ட முறை பிழை என்றும் இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு அனுப்பினால் மட்டும்; பிரச்சனை தீர்ந்து விடாது என்றும் கவலையடைகிறார். உண்மைக்குப் புறம்பான கதைகளை கூறி இந்திய அரசை தப்பாக வழிநடத்தாது அவர் அதன் நன்மதிப்பை பெற வேண்டும். அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் அதே போன்று விடுதலைப் புலிகளின் கட்டு;ப்பாட்டுப் பிரதேசத்திலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை மறுப்பதற்கில்லை. அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இச் செயலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பகுதியில் எந்தளவுக்கு விடுதலைப் புலிகளின் செயற்பாடு இருக்கின்றது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதைவிடுத்து முழுப் பழியையும் அரசு மீதோ, துணைப்படைகள் மீதோ சுமத்துவதை தவிர்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு வாhத்தையும் கூறுவதில்லை. தமிழ் இனத்தை அரசு அழிப்பதாக விடுதலைப் புலிகள் கூறுவதை ஆமோதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதைக்கூறி தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டியுள்ளனர். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட இக் கட்டுக்கதையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உலக நாடுகளிலும் மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டிலும் பரப்பி வருகின்றனர். படு மோசமான இக் குற்றச்சாட்டுக்களை கூறாமல் அவற்றை உரிய ஆதாரத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூற வேண்டும். கிளிநொச்சிக்குள் அயல் மாவட்டங்களாகிய மூன்று மாவட்டங்களின் இடம் பெயர்ந்த மக்களை கிளிநொச்சிக்குள்ளேயே அடக்கி அவர்களை வெளியேற விடாது பலாத்காரமாக தடுத்து தம் பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகள் வைத்துள்ளார்கள் என்பதை த.தே.கூ உலகறிய செய்ய வேண்;டும்.
த.தே.கூ தலைவர் மீது நான் குற்றம் காண முயற்சிக்கவில்லை. உணர்வைத் தூண்டக்கூடிய இப்பிரச்சினையை கையாள்;வதில் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என்ற முறையில் அவர் மிக அவதானமாக செயற்பட்டிருக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு அவர் வர காலதாமதம் ஏற்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இறுதியாக இலங்கை அரசுடன்தான் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பதை உணராது விடுதலைப் புலிகளின் சார்பான சில தலைவர்கள் ஆற்றிய உணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் மூலம் பொறுப்பற்ற பல விதமான குற்றச்சாட்டுக்களை அரசு மீது சுமத்தியுள்ளனர். பிரச்சினையை பலாத்காரமாக அன்றி அறிவுரை மூலமே சமாதானமாக அணுக முடியும். தூண்டப்பட்ட உணர்வுகள் உச்சக்கட்டத்தை அடைந்து இறுதியாக, மகிழ்ச்சி தராத, எதிர்பாராத, ஒரு கோரிக்கையாக தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை எழுப்பப்பட்டது. இக் கோரிக்கை இந்திய மத்திய அரசுக்கு பெரும் சங்கடமான நிலைமையை உருவாக்கி இருதலைக் கொள்ளியாக ஆக்கியது. 50 ஆண்டுக்கு மேல் புதைக்கப்பட்டிருந்த தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கை புத்துயிர் பெற்றது. அது முளையில் கிள்ளப்பட வேண்டியது ஒருபுறம், அதேபோல் இலங்கை இனப்பிரச்சினை மிக அவதானமாக அணுகப்பட வேண்டிய நிலை மறுபுறமாகும். இந்த நிலைமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டியது த.தே.கூ தலைவரே. இந்திய அரசு மீது குற்றம் சுமத்த முடியாது. த.தே.கூ உறுப்பினர்கள் கூறும் ஆலோசனைகள் அத்தனையும் இந்திய அரசு ஏற்க வேண்டும் என்றில்லை. விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தால் மோசடி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான த.தே.கூ உறுப்பினர்கள் கூறுவதை முற்றுமுழுதாக ஏற்க முடியாது. ஏனெனில் அவர்களுடைய நாணயம் கேள்விக்குரியதென முழு உலகும் அறியும். விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டமையாலும் விடுதலைப் புலிகளின் பினாமிகளாக செயற்படுவதாலும் தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்தும் உரிமையை அவர்கள் இழந்து விட்டார்கள்.
இந்திய தூதுவர் காரியாலய அதிகாரிகளின் மேற்பார்வையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் 2000 தொன் நிவாரணப் பொருட்களை இடம் பெயர்ந்தோருக்கு விநியோகிக்குமாறு தமிழ்நாட்டு அரசு மத்திய அரசை வற்புறுத்தியமையால் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் இது போன்ற சந்தர்ப்பங்களில் வழமையில் கையாளப்பட்டு வந்த முறையை மாற்ற வேண்டிய அவசியம் தமிழ் நாட்டின் வற்புறுத்தலால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் அழுத்தம் வேறு பலரின் அழுத்தத்தால் ஏற்பட்டமையால், மத்திய அரக்கு வேறு வழி இருக்கவில்லை. எது எப்படியிருப்பினும் தமிழ்நாட்டின் இக் கோரிக்கை சின்னத்தனமானது மட்டுமல்ல அச் செயல் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாகும். எச் சந்தர்ப்பத்திலும் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு இணங்கியிருக்கக் கூடாது. எத்தனை ஆண்டுகள்? ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேல் விடுதலைப் புலிகளி;ன் தலைவர், அவரின் குடும்பத்தினர், அவரின் போராளிகள், அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச பொது மக்கள் ஆகியோருக்கு உணவளித்து வந்தது இலங்கை அரசே என்பதை தமிழ் நாட்டு அரசுக்கு த.தே.கூ இனர் எடுத்துரைக்க வேண்டிய கடமைப்பாட்டில் இருந்து தவறிவிட்டனர். எப்பெப்போ வன்னிக்கு உணவுப் பொருட்கள் வந்ததோ அப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் தமக்கு வேண்டிய அனைத்தையும் எடுத்துக் கொண்டும் தமது பழைய கையிருப்புக்களுக்குப் பதிலாக புதியவற்றை மாற்றி எடுத்துக் கொண்டும் எஞ்சியவற்றையே மக்களுக்கு கொடுத்து வந்துள்ளனர் என்பதை தமிழ் நாட்டு அரசுக்கு நியாயப்படி கூறியிருக்க வேண்டும். முடிந்தால் என் கூற்றுக்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கட்டும்.
தமிழ் நாட்டின் கோரிக்கையால் வெட்கம் அடைந்தமையினாலேயே நான் இவற்றை கூற வேண்டியுள்ளது. 2004-ம் ஆணடு சுனாமி பலரை மரணிக்க வைத்தது. அநேகரை பட்டினியால் வாடவும் வைத்தது. அவர்களுக்கு தமிழர், இஸ்லாமியர் என்ற பாகுபாடின்றி பல சிங்கள வயோதிப மாதர்கள் உணவுப் பொட்டலங்களை தம் தலைகளில் சுமந்து எட்டு பத்துக்கட்டை தூரம் கால்நடையாகச் சென்று முன்பின் தெரியாத அவர்களுக்கு உணவளித்தனர். அப் பகுதியில் சிங்கள மக்கள் வாழவில்லை. சுனாமி நிவாரணப் பொருட்களில் கூட விடுதலைப் புலிகள் தமக்குரிய அளவுக்கு மேலாக கூடுதலாக எடுக்கத் தவறவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தடவை யாழ்ப்பாணம் செல்லவிருந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தினர் துணைக்கு செல்லத் தயங்கியவேளை சில சிங்கள மாலுமிகளே அவ்வுணவு கப்பல்களை யாழ்ப்பாணத்து மக்களுக்கு எடுத்துச் சென்றனர். இலங்கை நாட்டில் உண்மையாக என்ன நடக்கின்றது என அறிய ஓர் உண்மை அறியும் குழு தமிழ் நாட்டிலிருந்து இதுவரை வராமை துரதிஷ்டமே. என்னால் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் உல்லாச பயணத்தை மேற்கொண்டு வந்தவர்களே அன்றி உண்மை நிலையை அறிய அல்ல.
த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்;களால் தவறாக வழிநடத்தப்பட்ட தமிழ் நாடு குறிப்பாக தம் மக்களுக்கும் பொதுவாக முழு இந்தியாவுக்கும் பெரும் ஆபத்தை உண்டு பண்ணியுள்ளது. தமிழ் நாட்டில் ஓர் யாழ்ப்பாணத்தை உருவாக்கும் வாய்ப்பை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்காதீர்கள் என்ற எனது பல கோரிக்கைகளை யாரும் பொருட்படுத்தவில்லை. இப் போக்கினை தமிழ் நாடு கட்டுப்படுத்தத் தவறின் நிச்சயமாக விரைவில் ஓர் மனித குண்டு பயிற்சி நிலையம் தமிழ்நாட்டில் உருவாகும். சரித்திரம் எனது கூற்றை பதிவு செய்து வைத்து என்றாவது ஒருநாள் அதை நினைவுகூறி நிச்சயம் வருந்தும்.
யுத்தத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களில் நான் ஒருவன் மட்டுமே இலங்கையில் உள்ள நிலைமையை எடுத்துரைக்கும் ஆற்றலுடையவனாவேன். நான் கிளிநொச்சி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவன் என்பதை தமிழ்நாட்டு முதல்வர் நன்கறிவார். தற்போதைய யுத்த மேகங்கள் கிளிநொச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. அத்துடன் நான்கு மாவட்டங்களின் அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்து கிளிநொச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டோ அல்லது பலாத்காரமாக தள்ளப்பட்டோ விடுதலைப் புலிகளால் கட்டாயப்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடலுக்கு அப்பால் வாழும் 600 லட்சம் தமிழ் மக்கள் அவர்களை விடுவிக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காது கொடும் பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை பாதுகாப்பதிலேயே அக்கறையாக உள்ளனர்.
இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மக்களை விடுவித்து 80 வீதத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைய வழிவகுக்க வேண்டும். அத்தோடு அவர்கள் இணைந்து ஒன்றுபட்டு இலங்கை அரசை, அணைத்து மாகாண சபைகளுக்கு இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஒத்த ஓர் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே நாட்டுக்கு சமாதானத்தை கொண்டுவர உள்ள ஒரேயொரு வழியாகும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply