மறுவாழ்வுக்கான முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான புலிகள்
உலக நாடுகள் அனைத்தும் ஒரு `தோல்வி யுத்தத்தை` தொடங்க வேண்டாமென புலிகள் தலைமைக்கு இடித்துரைத்தும் `சொல்வழி கேளாது` இராணுவ வெற்றியால் எதையும் சாதித்து விடலாமெனும் அரசியல் வங்குரோத்து புலிகளை மட்டுமல்ல புலிகளை பெரிதாக நம்பிய பலரையும் பேரிடிக்கு ஆளாக்கியுள்ளது. புலிகள் மீதான இராணுவ வெற்றி எப்படிக் கிடைத்தது என்பது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
“கடந்த 2 ஆண்டுகளாக புலிகளுக்கு எதிரான போரில், இராணுவத்துக்கு தொடர் வெற்றி கிடைத்தது. இது புலிகளின் முன்கள வீரர்களிடம் கடும் சோர்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் சரணடையத் தொடங்கினர்.
மோதல் தீவிரமானபோது, முன்கள வீரர்கள் 2 ஆயிரத்து 65 பேர் தாமாக முன் வந்து சரண் அடைந்தனர். தமிழ் ஈழத்துக்காகத் தாம் போரிடவல்ல, புலிகளின் தலைவர்கள் உயிரை காப்பாற்றவே தம்மை முன்னால் நிறுத்தி உள்ளனர் என்பதை உணர்ந்து அவர்கள் சரணடைந்தனர்.
கடைசிக் கட்ட தாக்குதல் நடந்தபோது பொது மக்களுடன் சேர்ந்து 2 ஆயிரத்து 379 புலிகள் ஊடுருவி இருந்தனர். விசாரணை நடந்தபோது அவர்களும் சரண் அடைந்தனர். மொத்தத்தில் பத்தாயிரம் புலிகள் எமது இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 202 விடுதலைப்புலிகள் எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்த நன்கு பயிற்சி பெற்றவர்களாவர்.
கரும்புலிகளும் சரண் அடைந்துள்ளனர். அதிகப் பயிற்சிகளுடன் தீவிர உறுப்பினர்களாக இருந்தவர்கள் தனித்தனி இடங்களில் விசேட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 ஆயிரத்து 237 புலிகள் பல்வேறு முகாம்களில் மறுவாழ்வு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1600 பேர் பெண் மற்றும் சிறு வயது புலிகளும் இனம் காணப்பட்டு முகாம்களில் பிரிக்கப்பட்டுள்ளனர். புலிகளுக்கு எதிராக கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிரப்போர் ஆரம்பமானது. அன்று முதல் போர் முடிவதற்குள் 22 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்றிருக்கிறோம்.
இராணுவத் தரப்பில் 6261 பேர் பலியானார்கள். 29 ஆயிரத்து 551 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 2 ஆயிரத்து 556 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊனமடைந்து விட்டனர். பொது மக்களில் ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
போர் காரணமாக தமிழர்களில் 2 லட்சத்து 71 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் 29 இடங்களில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இலங்கை வடக்குப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும். அதுவரை அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள். முகாம்களில் அவர்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply