ஐந்து நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம்

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடையின்றி துரிதமாக சகல வசதிகளையும் வழங்குவதற்காக 5 நிவாரணக் கிராமங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடைய தேவைகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தமைலமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி உணவு, நீர் வசதிகளுக்கு ஒரு அதிகாரியும், பராமரிப்பு, நலன்புரி நடவடிக்கைகளுக்கு ஒரு அதிகாரியும், ஆற்றல் அபிவிருத்திக்கென ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டனர்.

இது தவிர ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராம உத்தியோகத்தர், கள அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் நியமிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவை அமைச்சு தெரிவித்தது. இந்த உயர்மட்ட மாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு, நீர், மின்சாரம், பராமரிப்பு பணிகள், தங்குமிட வசதி, கல்வி நடவடிக்கை என்பன குறித்து முக்கியமாக ஆராயப்பட்டன. மக்களுக்கு வழங்கிவரும் வசதிகளில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இதன் போது வவுனியாவில் இயங்கும் சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களினதும் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையினை துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கேட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை 5 நிவாரணக் கிராமங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணக் கிராமங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறும் இடம்பெயர்ந்த மக்களுக்கு துரிதமாக உரிய வசதிகளை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொலைபேசி வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இந்தக் கூட்டத்தில் திட்ட மற்றும் செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளர் லலந்த அபேகுணவர்தன, பிரிகேடியர் சி. சி. பெரேரா, அரச, அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், நீர்ப்பாசன, மின்சார சபை பிரதிநிதிகள் உட்பட பல அரச நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply