தமிழ் மக்களின் சமகால அரசியல் திசைவழி
புலிகள் அரசியல் ரீதியிற் தோற்கடிக்கப்பட்டு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் எறியப்பட்டதோடு அதன் உச்சியிலிருந்த யுத்தப் பிரபுக்கள் முற்றாகவே அழிக்கப்பட்டு அவ்வியக்கம் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மிஞ்சிய புலி அங்கத்தவர்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வு அளிக்கும்படி அரசாங்கத்தைக் கோருவது எமது கடமையாகும். இந்த யுவதிகளும் இளைஞர்களும் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இரண்டுபக்க இனவாதச் சூறாவளியால் புலி அமைப்புக்குள் தூக்கியெறியப்பட்டவர்கள். அவர்கள் ஒரு `தோல்வி யுத்தத்தில்` பகடைக்காய்களாய் போனதற்கு இலங்கையின் தமிழ் சிங்கள அரசியல் தலைமையே காரணமேயொழிய அந்த இளம் சமுதாயம் முழுப் பொறுப்பாளிகளும் அல்ல.
அவர்கள் மீண்டும் பாசிச பயங்கரவாத அரசியலில் வீழ்வதற்கான எந்த வாய்ப்பே இனி இல்லை. அவர்கள் செய்த தவறு இலங்கையின் ஒட்டுமொத்த சமூகவாழ்வு செய்த தவறேயாகும். அவர்கள் சூழ்நிலையின் கைதியாகி பயங்கரவாதி ஆனார்கள். அவர்களை இலங்கையின் சராசரி பிரஜைகள் ஆக்குவதே நாகரீக அரசியல் ஆகும். அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வரைக்கும் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நின்றவிட்டது என்று சொல்வது பொருளற்றதாகும்.
1971 ஏப்பிரல் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜேவிபி இளைஞர்கள் 40000 பேர் புனருத்தாரணம் செய்யப்பட்டார்கள். அவர்களில் அனேகர் தமது பட்டப்படிப்பையும் உயர்தார பொதுத்தராதரப் பரீட்சைகளையும் பலரகமான தொழிற்கல்விகளையும் புனருத்தாரண முகாங்களிலே கற்றே சமூகத்தில் பெறுமதியுள்ள இளைஞர்களாகவே வெளியேறினார்கள். இன்று, அவர்களில் அனேகர் அரசாங்க சேவைகளிலும் மேற்கு நாடுகளின் தூதரகங்களிற் கூட வேலை செய்கிறார்கள். அதேபோல எமது தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் அரசாங்கம் புனருத்தாரணம் செய்யும்படி கோருவது எங்கள் எல்லோரதும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுக் கடமையாகும்.
இன்றுள்ள அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் சிவில் சமூக கட்டமைப்புகள் சுதந்திரமாக மீள் உருவாக்கம் பெற அநுகூலங்களானவை அல்ல. இந்தக் கோரிக்கையை நாம் வினயமாக வைப்பதன் மூலம் சிங்கள, முஸ்லிம், மலையக மக்களோடு நடைமுறையில் ஐக்கியப்படுவோம். ஏனெனில் இது இலங்கைத்தீவின் அனைத்து இனத்திற்கும் பொதுவான பிரச்சனையாகும். இதை அகற்றுவதற்குப் பொதுக்குரல் கொடுப்பதன் மூலம் மாத்திரம்தான் அனைத்து இன மக்களும் ஐக்கியத்தின் மெய்யான உணர்வை பெறுவார்கள்.
கடந்த இரு தசாப்தத்துக்கு மேலான புலிப் பாசிசத்தின் பிற்போக்கு அரசியல் தமிழ் மக்களைத் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் அடிமைப்படுத்தப்பட்ட இனமாகவும் ஆக்கி விட்டது. இந்த நிலையில் தொடர்ந்தும் தாக்குதல் அரசியலை மேற்கொள்வதானது தமிழினத்திற்கு மேலும் அரசியற் பொறிவுகளை ஏற்படுத்தவே வழி வகுக்கும். இன்றோ தமிழ் மக்களுக்கு மூச்சுவிடுவதற்கு அவகாசம் வேண்டும்.
ஜனாதிபதியின் அண்மைய நாடாளுமன்ற உரையிலே தாம் வெளிநாடுகள் திணிக்கும் அரசியல் தீர்வைத் தரப்போவதில்லையென்றும் இலங்கைக்குள் உருவாகும் அரசியல் தீர்வையே தரப்போவதாகவும் கூறியதன் அர்த்தம் அரசியல் முக்கி்யத்துவம் வாய்ந்தது.
ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஒத்துக் கொண்ட வேளையில் `சமஷ்டி` முறையிலான அரசியல் தீர்வு வைக்க வேண்டும் என்ற `வெளி`அழுத்தங்கள் துருவ நிலைப்பட்ட அரசியல் வில்லங்கத்தை விலை கொடுத்து மீண்டும் வாங்கியதாய் போய்விடக் கூடும்.
ஜேர்மனி இரண்டாம் உலக யுத்தத்தில் முற்றாக அழிக்கப்பட்டு
மீண்டும் கட்டியெழுப்பப்படும் பொழுது 1947ல் ஜேர்மனியின் கடைசிக் கிராமமும் தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டு குடிநீர் வசதி, கழிவு வடிகால் முறைகள் ஏற்படுத்தப்பட்டு நவீன வாழ்க்கைக்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டது. அதே போல இருபத்தாறு வருட யுத்த இடிபாட்டிலிருந்து மீளும் பிரதேசங்கள் அத்தனையும் மின்சார இணைப்பு, தொலைபேசித் தொடர்பு, குடிநீர் வசதி, கழிவு வடிகால் போன்றன அமைக்கப்பட்டுத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வாழ்வியல் குடியிருப்புக்களைக் கொண்டிருப்பதாக அமைய நாங்கள் ஆசைப்பட வேண்டும். அப்படி நிர்மாணிக்கப்பட நாம் சிபார்சு செய்யவும் முழு ஒத்தாசை வழங்கவும் எம்மைத் தயார்படுத்த வேண்டும்.
பிரஜா உரிமைச்சட்டம் ரத்தாகி விட்டது. தமிழ் மொழி அரச மொழியும் தேசிய மொழியுமாகி விட்டது. இந்தியாவிலேயே தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்த வேளையில் இலங்கை அதையெண்ணிப் பெருமைப்படவே வாய்ப்புண்டு. அடுத்து இன்று தரப்படுத்தலால் வடக்கு கிழக்கு மாகாண மாணவர்கள் லாபமே அடைவர். பரிதாபகரமாக தமிழ் சமூகத்தில் உபரியாகப் கல்வி கற்றோர் தொகையும் இல்லை. தமிழ் சமூகத்தில் வேலை செய்வதற்கே கற்ற தமிழர்கள் பற்றாக்குறையாக இருக்கும்பொழுது சிங்களப் பிரதேசத்தில் சிங்களம் படித்து வேலைசெய்ய வேண்டிய கடந்த கால நிர்ப்பந்தம் இனிமேல் இராது.
ஒவ்வொரு பிரச்சினைகளையும் இயற்கை தோற்றுவிக்கும் பொழுது அதன் கற்பத்தில் அதற்கான தீர்வையும் சேர்த்தே தோற்றுவிக்கும் என்பதே தத்துவ மேதைகளின் கூற்றாகும். அந்தத் தீர்வானது இப்பொழுது கண்ணுக்குத் தெரியவில்லையெனில் அது உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மையாகும். தமிழ் மக்களின் இன்றைய துரதிஷ்டங்களுக்கும் தீர்வு இல்லாமலா போய் விடும். நாம் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியென்ற முறையில் வரலாறு தந்த அவல நாட்களில் நாமும் பிறந்து வாழ்ந்தவர்கள் என்ற வகையில் எம்மாலான அத்தனை முயற்சிகளையும் இந்தத் துரதிஷ்டத்திலிருந்து நீங்கச் செய்ய வேண்டும்.
எங்கள் கண்முன்னால் பஞ்சையாய் பராரியாய் நிர்க்கதியாய் எடுப்பார் கைப் பிள்ளையாய் ஏதுமறியாத அப்பாவிகளாய் திசைதெரியாது திக்குமுக்காடித் திகைப்பே வாழ்வாகக் கொண்ட அந்த அன்னைகளதும் தந்தைகளதும் தங்கைளதும் தம்பிகளதும் பிரச்சனை வேறு எவரின் பிரச்சினையோ அல்ல. அது எங்களது சொந்தப் பிரச்சனையாகும். இந்த மகா சிக்கல் நிறைந்த பிரச்சினைக்கு இலகுவான தீர்வு இல்லாத போதும் எமக்கு முன்னுள்ள கடமையானது அவர்களுக்கு ஓர் எதிர்கால நம்பிக்கையைக் கொடுப்பதாகும்.
இந்த மக்களுக்கு எவரெல்லாம் உதவினார்கள் என்பதை மனச்சாட்சியோடு அவர்கள் சரித்திரம் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டும். அதற்கோர் இலகுவான வழியும் இப்பொழுது கிட்டியுள்ளது. யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் வதியும் இடைத்தங்கல் முகாங்கள் ஒவ்வொன்றிலும் இலங்கை வங்கியின் கிளைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. முகாங்களில் உள்ளவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் இலகுவாக உதவி செய்யுமுகமாக ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கையும் எந்தவித செலவுமின்றி திறந்து வைப்பதாக இலங்கை மத்திய வங்கியின் முகாமையாளர் திரு மடதெனியா உத்தரவாதமளித்துள்ளார். எங்களது நிர்க்கதியான சொந்தங்களுக்கு வங்கிகளின் மூலம் நேரடியாகவே நிதியை அனுப்ப வழி திறந்துள்ளது. இந்த மக்களுக்கு உதவி செய்வதைக் கண்கண்ட கடமையாய் கொள்ளுமாறு புலம்பெயர் தமிழ் மக்களை அன்பாக வேண்டுகின்றோம்.
நீங்கள் அனுப்பும் பணத்தினுடன் அங்குள்ள மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் சேர்த்தே அனுப்புவீர்கள் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
இன்று நீங்கள் செய்யும் அற்ப உதவிகளுக்கு நிகராக எதிர்காலத்தில் கொடுக்கப்படும் கோடிகள் கூட நிகராகா.
‘காலத்தினாற் செய்த சிறு உதவி ஞாலத்தில் மாணப் பெரிது’ என்றும்
‘செய்யாமற் செய்த சிறு உதவி வையகத்தின் வானகத்தின் மாணப் பெரிது’ என்கிறான் வள்ளுவன்.
முகாங்களில் வாழும் மக்களின் பிரச்சினையைப் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தலையாய பிரச்சினையாகக் கொள்ள வேண்டும்.
ஏன்?
இந்த மக்களை அவர்களது சொந்த பழைய வீடுகளுக்குப் போவதற்கு உதவி செய்வதிலும் பார்க்க எந்த வழிகளிலும் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாது. அப்படிச் செய்யாதுவிடின் அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களாக சபிக்கப்பட்டவர்களாக காலமெல்லாம் உணர்வார்கள். அவர்களது பாரம்பரிய வேரும் வேரடி மண்ணும் கிள்ளியெறியப்பட்டவர்களாக போவார்கள்.
நம்மாள்வார் பாடலொன்றின் வரிகளான “கங்கையில் புனிதமானது காவிரி. சொர்க்கத்தில் சிறந்தது திருவரங்கம்“ என்பது போல் “வன்னி மக்களின் சொர்க்கம் வன்னிதான்“
இவர்கள் ஒவ்வொருவரும் தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் குடியேறினால் மாத்திரம்தான் கால்நூற்றாண்டு யுத்தத்தில் தொலைந்து போன வாழ்வை ஓரளவாவது மீளப்பெற வாய்ப்பு ஏற்படும். வாழையடி வாழையாக அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களுக்கே பொதுவான கலாச்சாரமும் சம்பிரதாயமும் வரலாற்றுத் தொடர்ச்சியும் அறுபடாமல் தொடர்ந்து மீண்டும் வளர்ந்து செழிக்கும்.
ஆக, இவர்கள் தமது சொந்த வீடுகளுக்குப் போவதற்குப் பாடுபடுவதிலும் பார்க்க முக்கியமான ஒரு அரசியல் பணி எதுவும் சமகாலத்தில் இருக்க வாய்ப்புகள் இல்லையெனலாம்.
`சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையாலாம்` என்ற மிகச்சின்ன முதுமொழி தமிழ் மக்களின் சமகால அரசியல் திசைவழியை மிகத் தெளிவாக நிர்ணயம் செய்கிறது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply