பூநகரியிலிருந்து விடுதலைப் புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கல்

பூநகரியிலிருந்து தந்திரோபாயமாகப் பின்வாங்கியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கூறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அரசாங்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்படும் என அண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயனந்தமூர்த்தி மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் தகவலொன்றைப் பரிமாறியிருந்ததாக ‘சண்டே லீடர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனையும் சந்தித்திருந்ததாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடிக்க முடியாதெனவும், இறுதியில் ஒருவர் இருக்கும்வரை போராடுவோம் எனவும் வன்னியில் கூறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ஏனைய கூட்டமைப்பினருக்குக் கூறியதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பிரசாரங்களால் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கும் தென்பகுதி மக்கள் எதிர்வரும் சில மாதங்களில் மோதலின் பாதிப்பு என்ன என்பதை உணர்ந்துகொள்வார்கள் என விடுதலைப் புலிகள், வன்னி சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டமொன்றைப் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்தால் சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் எனவும், விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருப்பதாக சண்டே லீடர் பத்திரிகை தனக்கு நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply