வடக்கு கிழக்கு மக்களின் எதிர்காலம்

புலிகளின் அழிவு மானிடத்திற்கு என்ன செய்தியை வெளிப்படுத்துகிறது என்றால் அரசியல் நெறிப்படுத்தல் அற்ற வெறும் மூர்க்கத்தனமான வீரமும் இராணுவ வீர சாகசங்களும் ஒரு போராட்டத்தை வெற்றி கொள்ளச் செய்யாது என்பதே. 70களில் இலங்கையில் தீவிர ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரிகளின் அரசியல் வருகையானது சிறுபான்மை இனச்சிக்கலை வன்முறைக்கு இட்டுச்சென்றது.  முன்னைய அரசுகள் இனப்பிரச்சி்னையை எதிர்கொள்வதற்கு எப்படி 77லும் 83லும் அரச இயந்திரத்தை சண்டித்தன முறையில் கையாண்டதோ அதே முறையில் தமிழ் தரப்பில் தீவிர ஏகாதிபத்திய ஆதரவு வலதுசாரியான சர்வாதிகாரி பிரபாகரன் சிறுபான்மை இனத்தின் நியாயமான அரசியல் கோரிக்கையை  பாசிசப்போக்குடன் கையாண்டு பயங்கரவாத தளத்திற்கு இட்டுச்சென்றார்.

மானிடத்துக்கு அச்சுறுத்தலாகவும், அழிவுகளையும் ஏற்படுத்தும் தீவிரவாத அரசியலையும், வகுப்பவாத வன்முறை பயங்கரவாதத்தையும் தேசத்தில் இருந்து அந்நியப்படுத்தும், அழிக்கப்படுவதும் எவ்வளவு முக்கியமானதோ முதன்மையானதோ அதேபோல் பயங்கரவாத்திற்கான ஊற்றுக்களையும், மூலகாரணிகளையும் கண்டறிந்து அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், பிரச்சினைகளுக்கு தீர்வை தேடுவதிலும் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சக்திகளையும தேசத்தில் இருந்து ஓரம்கட்டுதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் காட்டப்பட்ட வேகத்திலும் கூடுதலான வேகத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுதல் வேண்டும்.

மகிந்த இலங்கை அதிபராக பொறுப்பேற்றபோது சமாதானத்தின் மீது ஆர்வம் காட்டுபவராகவும், புலிகளுடனான பேச்சுவார்த்தையை தொடருபவராகவும் தன்னை காட்டிக்கொண்டார். ஆனால் புலிகளோ ரணிலுடனான சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே தமது அரசியல் எதிரிகளை, இராணுவத்தை, பொதுமக்களை, உளவு அதிகாரிகளை கொன்றொழித்தார்கள். அதன் உச்சக்கட்டமாக மாவிலாறு அணையை மூடி விவசாயிகளின் வயிற்றிலடித்தார்கள். மூதூரில் முஸ்லீம் மக்கள் மீது இனப்படுகொலையை நடாத்தினார்கள்.

புலிகள்தான் மகிந்த அரசு மீது யுத்தத்தை தேர்வு செய்யும்படி பல வழிகளிலும் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். தனது மக்களையும் தேசத்தின் இறைமையையும் பாதுகாக்கும் வகையில் மகிந்த அரசு நடவடிக்கையில் இறங்கியது.

உலக நிலவரங்கள், வரலாறுகள் இப்படியிருக்க ‘ஆழம் அறியாமல் புலிகள் காலை விட்டனர்’. சமாதான காலகட்டங்களில் சமாதான பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டாது, இலங்கை குடியரசின் கடவுச்சீட்டில் உலகெல்லாம் பறந்துதிரிந்து, ஆயுதங்களைச் சேர்த்துக்கொண்டனர். தங்களுக்கு சவாலாகவுள்ளவர்களை நயவஞ்சகமாக சுட்டுக்கொன்றார்கள். யுத்த தயாரிப்பில் மும்முரம் காட்டுகிறபோது 70 வீதமான பெரும்பான்மையாகக் கொண்ட எந்த இனம்தான் பொறுமையாக இருக்கும். எதுவாக இருந்தாலும் நாம் யதார்த்தமாக சிந்திக்கப் பழகவேண்டும்.
அது மட்டுமல்லாது இலங்கையில் இனப்பிரச்சினையை ஆய்வு செய்யும்பொழுது 83ம் ஆண்டுக்கு முன்பும் பின்புமாக ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தரவுகளை வெளியிட்டுள்ளன.

83ம் ஆண்டு இனக்கலவரத்துக்கு முன்பும் இனக்கலவரத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை விட விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியதாகச் சொன்ன புலிகளே தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை அதிகளவில் கொன்று குவித்திருக்கிறார்கள்.
உதாரணமாக தமிழ் தரப்பில் விடுதலைப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட முதல் கொலையாக மேயர் அல்பிரட் துரையப்பாவை கூறுகிறார்கள். அதைத் தொடர்ந்து சுந்தரம், மனோ மாஸ்டர், ஒபரோய் தேவன், ராஜினி திரணகம, சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா, கவிஞர் செல்வி, கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சாம் தம்பிமுத்து, இயக்கத் தலைவர்களான சிறீ சபாரட்ணம், பத்மநாபா, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, மகேஸ்வரி வேலாயுதம், , முஸ்லீம் மக்களின் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இதர முஸ்லீம் படுகொலைகள், சிங்கள சகோதரர் மீதான படுகொலைகள், அரசாங்க அமைச்சர்கள், தலைவர்கள் என படுகொலைகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.

இலங்கை யுத்த வரலாற்றின் பதிவேடுகளில் புலிகளே இன, மொழி, வயது வேறுபாடின்றி கொலைகளை புரிந்துள்ளனர். இதில் மனதை நெருடக்கூடிய, மனதை கவலையில் ஆழ்த்தக்கூடிய விடயம் என்னவெனில் புலிகளை ஆதரித்த மக்களாலும் சரி, புலிகளை ஆதரித்த தமிழ் கூட்டமைப்பினராலும் சரி புலிகளை ஆதரித்த தமிழக திராவிட சக்திகளாலும் சரி, புலிகளை பெருமளவில் ஆதரித்த புலம் பெயர் தமிழ் மக்களாலும் சரி இந்த அரக்கத்தனங்களை இந்தக் கொலைகளை ஏன் செய்தீர்கள்? ஏன் செய்கிறீர்கள்? என்றோ கேட்க முடியவில்லை.

மாறாக புலிகளின் மானிட விரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தியும் போராட்டத்தில் இழப்புகளும், களையெடுப்புக்களும் சர்வ சாதாரணம் என கூறிவந்தார்கள்.
அதேபோலவே கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக புலிகள் வெளிப்படுத்தி வந்த வன்முறை வெறித்தனங்களையும், கட்டுக்கு அடங்காத கொலை வெறியையும் அரசு புலிகள் பாணியில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கடந்த காலத்தில் புலிகளது மானிடவிரோத காரியங்களை எப்படி கண்டுகொள்ளாது நடந்துகொண்டார்களோ அது போலவே புலிகளது அழிவையும் போராட்டத்தில் இது எல்லாம் சகசம் என எடுத்துக்கொள்ளவேண்டும். `தலைவர்` ஒருமுறை கூறியதுபோல ‘சுனாமி’ அழிவு தமிழ் மக்களுக்கு புதியது அல்லவே.

பிரபாகரன் தனது ‘மாவீரர்’ உரையில் அடிக்கடி பாவிக்கும் வசனம் ‘இயற்கை’. அதாவது இயற்கையே தனது வழிகாட்டி எனவும், இயற்கையே தனது நண்பன், ஆசான் எனவும் கூறிவந்துள்ளார். அவர் கூறின வரலாறு வழிகாட்டிகளான ஹிட்லர், முசோலினி, இடியமீன், சதாம் உசேன், மிலோச்சுவீச் ஆகியோர்களுக்கு வரலாறு என்ன தண்டனை முடிவுகள் கொடுத்தனவோ அதே பாணியில் பிரபாகரனுக்கும் முடிவு கிடைத்திருக்கிறது.

இந்த நூற்றாண்டில்தான் ஹிட்லரையும், முசோலினியையும், இடியமீனையும், சதாம் உசேனையும், மிலோச்சவிற்றையும், பிரபாகரனையும் பார்த்தோம். ஆனாலும் வர்க்கபேத உலகில் மொழி, மதம், இனம் எனும் ‘கருவிகளை’ தூக்கிப்பிடிக்கும் நவீன சர்வாதிகாரிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் புலிகளின் இராணுவ வீரியம் உச்ச நிலையில் இருந்தது. ஆய்வாளர்களும், ஆதாரவாளர்களும் புலிகள் ‘வெல்லப்பட முடியாதவர்கள்’ என்றும் காற்று புக முடியாத இடத்துக்குள்ளும் புகுந்து கொள்வார்கள்’ என்றும் `தேசியத் தலைவரை` யாராலும் நெருங்க முடியாது என்றும் ‘சூரியோதயத்துக்கு ஒப்பானவர்’ என்றும் விதந்துரைக்கப்பட்டது. ஆனால், நமது மூதாதையர்களின் கூற்று ‘கத்தி எடுத்தவன் கத்தியாலேய சாவன்’ என்று பிரபாகரன் விடையத்திலும் அதுதான் அரங்கேறியுள்ளது.

ஜே.ஆர், பிரேமதாசா போன்றவர்களால் முன்னுரை எழுதப்பட்ட உலகின் மிககொடிய புலிப் பயங்கரவாதத்திற்கு மகிந்த அரசு முடிவுரை எழுதின செயற்பாடானது வரவேற்க்கப் படவேண்டிய ஒன்றும், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் குறிப்பேடுகளில் பதியப்பட வேண்டியதுமாகும்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 83ம் ஆண்டு காலப் பகுதி ஒரு பொற்காலம். சிறுபான்மை இனங்களிற்கு நம்பிக்கை மிகுந்த காலமாக இருந்தது. பன்முக ஆழுமைமிக்க தலைவர்களின் அரசியல் நெறிப்படுத்தல் தீர்க்க தரிசனமிக்க தொலை நோக்கான பார்வைகள் இந்தியாவை பகைத்துக் கொள்ளாத அரசியல் முன்னெடுப்புக்கள் என சிறபான்மை இன மக்களுக்கு ஆர்வத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தகாலம்.

அதன் பிரதிபலனாக நான்கு விடுதலை அமைப்புகள் ஒரே குடையின் கீழ் ENLF எனும் அமைப்பை ஸ்தாபித்து 85ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து 87ம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஓர் ஒளியை, புதிய பாதையை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பிராந்திய – பூகோள அரசியல் தன்மைகள் கொண்ட ஓர் அற்புதமான வாய்ப்பாக அமைந்தது.

அந்த வரலாற்று ரீதியான பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டவர்கள் புலிகளே.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் வகையில் இந்திய இராணுவத்தின் தலையீடு அந்த சமயத்தில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்று ராஜீவ் காந்தி பிரதமராகக் கூடிய சூழ்நிலைகள் இருந்தபடியால் அதை விரும்பாத புலிகள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை குழப்பும் வகையில் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுடன் பிரேமதாசா அரசுடன் இணைந்து இந்திய இராணுவத்தை இலங்கையை விட்டு வெளியேற்றியதுடன் சகோதர இயக்க அழிப்பிலும் ஈடுபட்டார்கள்.

புலிகள் ‘இந்திய எதிர்ப்புவாதத்தை’ கக்கியதின் விளைவாக ஈழத் தமிழர் வாழ்வில் அன்று ஓடத் தொடங்கிய இரத்த ஆறு இன்று எங்க வந்து முடிந்திருக்கிறது என்று பாருங்கள்.

தமிழ் சமூகம் மீளப் பெறமுடியாத இத்தனை இழப்புக்களும் யாரால் ஏற்பட்டது?

நிச்சயமாக புலிகளால்தான் ஏற்பட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்ததினால் இவ்வளவு இழப்புகளுக்கு பின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைவிட தமிழ் மக்களுக்கு எதையாவது சிறப்பாக பெற்றுக் கொடுத்தார்களா?

இல்லை.

22 வருடத்திற்கு பின் மீண்டும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் குறித்தே பேசுகிறோம்.

கடந்து வந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம்.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலான யுத்தத்தில் தமிழ் சமூகத்தின் அவலத்துக்கும் புலிகளின் அழிவுக்கும் புலம் பெயர் புலி ஆதரவாளர்களே பொறுப்பு ஏற்கவேண்டும். ஏனெனில் புலிகளின் தோற்றுப்போன யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் மொத்தத் தமிழ் மக்களின் அழிவுகரமான பாதைக்கு ஊக்கம் கொடுப்பவர்களாகவும் செயற்பட்டார்கள்.

புலிகளுக்கும் – ரணிலின் அரசுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட காலத்திற்கு பின்பு அதாவது 2002 க்கு பின் புலிகள் செய்த கொலைகள், மனித உரிமை மீறல்கள், மானிட விரோத செயற்பாடுகளை தவிர்த்து சரி, பிழைக்கு அப்பால் தேசநலன் கருதி, சமூகநலன் கருதி அப்ரூவராக மாறவதற்கு வன்முறை அரசியலை கைவிட்டு ஒரு ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு ஓர் அற்புதமான வாய்ப்பு இருந்தது.

புலிகள் அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தாது புலம்பெயர் தேசங்களில் நடைமுறைச் சாத்தியமற்ற தமிழ் ஈழக் கனவை விரைவாக அடைவதற்கு பெருமளவில் உதவி செய்யுமாறு மிகப்பெரியளவில் பரப்புரை செய்தனர். ஆயுத தளபாடங்களை வாங்கிக் குவிப்பதில் தங்கள் கவனத்தை செலுத்தியதுடன் அவர்களது ஆதரவாளர்களிடத்தில் பணத்தை பிடுங்கி எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இந்த மக்களின் பணம், உழைப்பு, வளங்கள் அனைத்தும் ஒரு நாள் எரிந்து சாம்பலாகப் போகிறது என்பதை புலிகளும் சரி அவர்களது ஆதரவாளர்களும் சரி கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

யாருடைய புத்திமதியையும் ஆலோசனையையும் கேட்க கிரகிக்க மறுத்த ‘வீட்டோ’ அதிகாரம் உள்ள புலித் தலைமையை புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் புகலிட பன்முக வாழ்வியல் கூறுகளையும் பன்முக அரசியல் அனுகூலங்களையும், வசதிகளையும், அனுபவங்களையும் தாங்கள் அனுபவித்தார்களே அன்றி அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி புலித் தலைமைமீது அழுத்தம் கொடுப்பதற்கு தவறியமை மாபெரும் வஞ்சகமாகும்.

ஆகமொத்தத்தில் கடந்த இரண்டரை வருட காலத்தில் வந்த வாய்ப்புக்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வட- கிழக்கு மக்களின் அவலத்தையே மூலதனமாக்கி வாழ்ந்ததுடன் இறுதியாக வந்த 48 மணித்தியால சந்தர்ப்பத்தையும் புதைகுழிக்கு தள்ளியதுடன் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட பாவப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கியதுடன் ஒட்டு மொத்த சமூகத்தையே நடைப் பிணமாக்கிவிட்டு, வெட்கமில்லமல் கூச்சமில்லாமல் தங்கள் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வீம்புக்கு வீரப் பாட்டுப் போடுகிறார்கள்.

வெளிநாட்டுப் புலிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் குரல் கொடுப்பதற்கான காலகட்டம் புலிகளின் ‘அஸ்தமனத்துடன்’ காலவதியாகிவிட்டது. அதற்கான தார்மீக உரிமையை புலிகளும் புலி ஆதரவு சக்திகளும் இழந்துள்ளன.

புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை மக்கள் தமது தலைவிதியை எப்படி தீர்மானித்தார்களோ அவ்வாறே இனிவரும் காலங்களில் தமது அரசியல் தலைவிதியை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மட்டுமே தீர்மானிக்கும் உரிமையுடையவர்களாகவும் உரித்துடையவர்களாகவும் இருப்பர்.

– தேவன் (கனடா)

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply