மீள்குடியேற்றம் பற்றி ஆராய வவுனியாவில் உயர் மட்ட மாநாடு

நலன்புரி முகாம்களிலும், நிவாரண கிராமங்களிலும் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்துவது குறித்து ஆராய்வதற்காக, அரச உயர்மட்ட மாநாடொன்று அடுத்த வாரம் வவுனியாவில் நடைபெறுகிறது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.

அரச உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர், அதுபற்றி, மீள்குடியேற்றப் பணிகளுக்குப் பொறுப்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுமென்று அரச அதிபர்  தெரிவித்தார்.

முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள். இதற்கென முதலில் கண்ணி வெடிகளை அகற்றுவது பற்றிக் கலந்துரையாடப்படுமென அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். வட பகுதியில் மக்களைத் தமது சொந்த வாழ்விடங்களில் மீளக் குடியமர்த்தும் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் விசேட குழு நியமிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து இறுதிக் கட்டமாக வந்து, வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள், நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வவுனியா – பம்பைமடு நலன்புரி முகாமிலிருந்து சுமார் ஆயிரம் பேர் ஐந்தாவது நிவாரணக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply