13 ஆவது திருத்தச் சட்டத்தி்ன் கீழ் அரசியல் தீர்வுக்கு முயற்சி: டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிரபாகரனும், பிரபாகரன் பெயரிலான செயற்பாடுகளும் தடையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தடைகள் இப்போது நீங்கியுள்ளதனால், விரைவில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், புதன்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு, அதனை அரசியலமைப்பில் சேர்ப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்;புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது, இந்தத் திருத்தம் ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்றது. அத்துடன், இந்தியாவின் உதவியோடு கொண்டு வரப்பட்ட இந்தத்திருத்தச் சட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டு. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தி்ன் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இப்போதுள்ள ஒரேயொரு வழியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதும், அங்கு உள்ளுராட்சி சபைகள் மாகாண சபை என்பவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு. அங்கு சிவில் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

வடக்கு தேர்தலில் ஈபிடிபி கட்சியினர் சுதந்திரக் கட்சியின் பட்டியலிலேயே போட்டியிட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளாரே, உங்களது நி்லைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு இது தொடர்பாக தமக்கு எவரும் தெரிவிக்கவில்லை என்றும், வேண்டுமானால், ஜனாதிபதி ஊடகங்களுக்கு அவ்வாறு தெரிவித்திருக்க கூடும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

வடக்கு தேர்தலில் ஈபிடிபி கட்சி போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்திய அவர், இந்தத் தேர்தல் குறித்து தமது அமைப்பினருடன் தமது கட்சி விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி்த்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply