நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை அமெரிக்க மாநாட்டில் மன்மோகன் சிங் பேச்சு

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என்று அமெரிக்க மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகள் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிபர் புஷ், 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை வாஷிங்டன் நகரில் நேற்று கூட்டி இருந்தார்.

இதில் புஷ், பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ரஷிய அதிபர் மெட்வதேவ், பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஜப்பான் பிரதமர் டாரோ அசோ மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் கூறியதாவது:-

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

நிதி நெருக்கடி பிரச்சினையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. கடனுதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு பங்கு சந்தைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்த 9 சதவீத வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் வரும் ஆண்டுகளில் இந்தியா வலுவான வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் பிரச்சினையை சமாளிக்க முடியும்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அங்கு கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply