மறைந்திருக்கும் புலிகளை தேடி அழிக்கும் பணி ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பிரதேசத்தில் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறிய நிலையில் நேற்று (மே. 29) வெள்ளிக்கிழமை அதிகாலை கல்முனை, நற்பிட்டிமுனை, சொறிக்கல்முனை, வீரமுனை, சம்மாந்துறை, காரைதீவு சுற்று வட்டாரத்தின் மத்தியில் அமைந்துள்ள வயல் வெளியில் காணப்படும் நாணல்காடு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு அப்பிரதேசம் நோக்கி நாலா புறத்திலிருந்தும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.  

நேற்று காலை ஆறு மணி தொடக்கம் குண்டுத் தாக்கதல் நடத்திய விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரதேசம் ஆழம் கூடிய சகதியான சூழலைக் கொண்டுள்ளதால், தேடுதல் நடவடிக்கை முடிவடைய காலதாமதம் ஏற்படும் என அறிய முடிகிறது.

கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படும்போது கடந்த காலத்தில் இந்த நாணல்காட்டில் புலிகள் தங்கியிருந்து தாக்குதல்கள் மேற்கொண்டதாகவும், அதே பாணியில் இந்த நாணல் காட்டை தற்போது எஞ்சியுள்ள புலிகள் பயன்படுத்த எத்தனித்து வருவதாகவும், அதற்காகவே இப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply