சிங்களவர்களைக் குடியமர்த்தும் எந்த திட்டமும் அரசுக்கு இல்லை : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கச்சல் சமனலம் குளத்தை புனரமைத்து அதனை அண்மித்த பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் எந்தவிதமான திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பல வருடங்களாக பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள குளங்களைப் புனரமைப்பதற்கு விவசாயத் திணைக்களத்தால் அனுமதி கோரப்பட்டுள்ள போதும், இவ்வாறு புனரமைக்கப்படும் குளங்களின் பட்டியலில் கச்சல் சமனலம் குளம் உள்ளடக்கப் படவில்லையென்றும் அவர் கூறினார்.
பிரதமர் கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் எவரையும் குடியமர்த்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை. அது மாத்திரமன்றி குறித்த குளத்தை அண்மித்த பகுதியில் மக்களைக் குடியமர்த்த வனஜீவராசிகள் திணைக்களம் எந்தவொரு இடத்தையும் ஒதுக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு மாவட்டத்திலும் அங்குள்ள குடிசனப் பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்கின்றனர். இதனால் அவர்களையே அங்கு வாழவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நிலைப்பாட்டை யாராவது அதிகாரிகள் மீறுவார்களாயின் அதுகுறித்து அறிவித்தால் அவற்றை விசாரிக்க முடியும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply