அமெரிக்காவில் சினிமா பாணியில் அரங்கேறிய துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள நைஸ்டவுன் என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக போலீசார் அந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீஸ்காரர்களும் பதிலுக்குச் சுட்டனர். இதனால் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பான சூழல் உருவானது. இதற்கிடையில் சோதனை நடத்த சென்ற 2 போலீஸ் அதிகாரிகளை வீட்டில் இருந்தவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்தனர்.
இதையடுத்து, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. வீட்டுக்குள் இருந்த சிலர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்தம் சொட்ட பின்பக்க ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடினர். அதன் பின்னர் மாரிஸ் ஹில் என்பவர் மட்டும் வீட்டுக்குள் இருந்து கொண்டு பிணைக்கைதிகளை காட்டி தன்னை தப்பிக்க விடும்படி போலீசாரை மிரட்டிக்கொண்டிருந்தார். எனினும் அவர் தப்ப முடியாதபடி போலீசார் வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
சுமார் 7 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் 6 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மாரிஸ் ஹில்லிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சரணடைய அறிவுறுத்தினர்.
அதனை தொடர்ந்து, மாரிஸ் ஹில் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சினிமா பாணியில் அரங்கேறிய இந்த சம்பவம் பிலடெல்பியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply