நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் முழுமையான வெற்றியல்ல: ஐக்கிய தேசியக் கட்சி
நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் யுத்தத்தின் முழுமையான வெற்றியெனக் கூறமுயாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
நிலங்களைக் கைப்பற்றுவதுடன் நிலையான சமாதானத்துக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
“அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களில், கிளிநொச்சியைக் கைப்பற்றப்போவதாகவே கூறிவந்தது. தற்பொழுது அதனை மாற்றி பூநகரியைக் கைப்பற்றியுள்ளது” என அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இராணுவத்தினரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கம் தலையிடக்கூடாது என வலியுறுத்தியிருக்கும் அவர், அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கம், இராணுவத்தின் நிகழ்ச்சி நிரல்களில் தலையிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பூநகரியை வெற்றிபெற்ற இராணுவத்தினரைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குத் தாம் கௌரவம் அளிப்பதாகவும், இராணுவ வெற்றிகளை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்கம் நிலங்களைக் கைப்பற்றுவதுடன் அரசியல் தீர்வொன்றையும் முன்வைக்க வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply