வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார்
வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே தமிழ் இனம் உரிமைகளையும் சுபீட்சத்தையும் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கின்றார்.
வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் எஸ்.உதய ஜீவதாஸ் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அமைச்சர் அமீர் அலி அமைச்சர் முரளீதரனின் மக்கள் தொடர்பாளர் ஆனந்தராஜா (ரஞ்சன்) , ஊடக செயலாளர் யூலியன் (நியுட்டன்) மற்றும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்கொண்டனர்.
இத்திறப்பு விழாவில் அமைச்சர் முரளிதரன் உரையாற்றுகையில்;
தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்லை. தமிழ் கட்சிகள் இது வரை காலமும் விடுதலைப் புலிகளை வைத்துத் தான் வியாபாரம் செய்தனர். சில அரசியல் கட்சிகள் பிரபாகரனின் பெயரை விற்றார்கள் . இனி அவர்களால் என்ன தான் செய்ய முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்புரிமைகளை அதிகரிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் எதிர் கட்சியாகவே உள்ளது. அவர்களால் இன்று பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதாவது அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பாரப்பு இருக்குமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எமது இனத்தின் தேவைகளை சீக்கிரம் நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply