வானவில் போல் வேற்றுமையில் ஒற்றுமை காணல் வேண்டும்
பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் தி. சிறீதரனுடன் நேர்காணல்
புலிகளுக்கு பின்னரான அரசியல் சூழல் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்ததாலும் சமூக உணர்வுள்ள பல மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டதாலும் பாரிய தலைமைத்துவ வெற்றிடமொன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டது. ஜனநாயக இடைவெளி அடியோடு இல்லாதொழிக்கப்பட்டது. மாறுபட்ட சிந்தனைகள் உயிராபத்தை விளைவிக்கும் விடயமாக இருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சிந்தனை சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கருத்தாடல்களுக்கும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கும் பெரிதான ஒரு இடைவெளி வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ளது. நூறு கருத்துகள் மலரட்டும் என்றவாறான நிலையொன்று தோன்றியுள்ளது. ஏற்கனவே சமூகப் பிரக்ஞையுடன் செயற்பட்டவர்களும் புதிதாக சமூக அரசியல் பிரச்சினையுடன் வருவோர்களும் சங்கமிக்கும் காலமொன்று உருவாகியுள்ளது.
இக்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் வன்முறை கலாசாரத்தை முற்றாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நாகரிகமான ஜனநாயகம், மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட அரசியல் தளமொன்று ஏற்படுவதற்கு வழியேற்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் என்ன?
180 நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு வேகமான மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதும் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதும் மண்ணில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படுவதும் அவசியமாகிறது. அதேநேரம் வன்முறை செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் யாரும் முகாம்களில் இருந்தால் அவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டிய தேவையிருக்கிறது.
எனினும் முகாம்களிலுள்ள மக்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல குடும்பங்களின் அங்கத்தவர்கள் வௌ;வேறு முகாம்களில் வாழ்கின்றனர். உறவுகள் எங்கே இருக்கின்றன என்று பலருக்குத் தெரியாது. இழந்த இழப்புகளுக்கும் அனுபவித்த, கண்ட காட்சிகளும் இப்போது வாழும் நிலையும் பாரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுக்கும் தண்ணீருக்கும் காலைக் கடன்களுக்கும் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள். உறவுகளுடன் தமது துன்பங்களை பகிர்ந்து ஒப்பாரி வைக்கக் கூட முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். அவர்களின் சொந்த பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளிலும் மீள்குடியேற்றப் பணிகளிலும் அபிவிருத்தி மீள்கட்டுமான பணிகளிலும் இந்திய அரசு முழுமையாக பங்களிக்கத் தயாராக இருக்கிறது. வேறு சர்வதேச நாடுகளும் ஐ. நா. உள்ளிட்ட அமைப்புகளும் பணி செய்ய தயாராக இருக்கின்றன.
ஜனநாயக அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் மக்களுக்கு பணி செய்வதற்கு தமது விருப்பத்தை அரசிடம் தெரிவித்திருக்கின்றனர். இயலுமான வரை ஏற்கனவே தமிழ் ஜனநாயக அரசியல் கட்சிகளால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்ந்தளிப்பு சாத்தியப்படும் எனக் கருதுகியர்களா?
இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் சந்தர்ப்பங்கள் எல்லாம் புலிகளின் வன்முறை அரசியலால் சீர்குலைக்கப்பட்டன. அல்லது இழக்கச் செய்யப்பட்டன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக முன் வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளாக இருந்தாலும் சரி, சந்திரிகா அவர்களின் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட சமஷ்டி முறையான தீர்வாக இருந்தாலும் சரி, உதவிகள் வழங்கும் நாடுகளால் ஒஸ்லோவில் பரிந்துரைக்கப்பட்ட தீர்வாக இருந்தாலும் சரி அது புலிகளின் பாசிசத்தால் நிராகரிக்கப்பட்டது.
நீடித்துச் சென்ற யுத்தமும் வன்முறையும் பெருமளவு பொது மக்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் இலங்கையின் சகல சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தின.
இப்போது 30 வருடங்களாக புயல்களினூடாகவும் பூகம்பங்களினூடாகவும் பெரும்மானிட துன்பங்களினூடாகவும் ஒரு வட்டம் சுற்றி வந்தாயிற்று.
இப்போது தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தருணம் என்பது உலகமும் இந்தியாவும் அழுத்தி உரைத்திருக்கின்றன. பிரச்சினைகளின் வேர்களை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்ற கருத்து பலமடைந்திருக்கின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்கிறார்கள் என்று மனதார கருதுமளவிற்கு தீர்வை எட்ட முடியும். பிரச்சினை தமிழர்களுக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கக் கூடிய முஸ்லிம், மலையக மக்களின் அபிலாஷைகளையும் கருத்திற்கெடுக்க வேண்டும்.
இலங்கை சிங்கள பௌத்த நாடாக அல்லாமல் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள், பறங்கியர், மலாயர் என இங்கு வாழும் அனைத்து இன சமூகங்களினதும் பல்லினங்களின் தேசமாக நிர்மாணிக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்களின் மனக்காயங்கள் ஆற்றப்பட வேண்டும். உண்மையான ஐக்கியம், ஜனநாயக பூர்வமான ஐக்கியம் சகல சமூகங்களுக்கிடையே தோற்றுவிக்கப்பட வேண்டும். அதற்கான தருணம் வந்து விட்டதாகவே நாம் நம்புகிறோம்.
தமிழ் அரசியல் கட்சிகளிடையே உறவுகள் எந்த நிலையில் இருக்கின்றன?
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணியாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளில் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளையும் சிவில் சமூகத்தினரையும் உள்ளடக்கிய பரந்தவொரு ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்பட வேண்டும்.
குறிப்பாக பாரம்பரியமான இடதுசாரி கட்சிகளுடன் எமது உறவுகளை வளர்த்துக் கொள்வதும் வடக்கு, கிழக்கின் மிக மோசமாக மாசடைந்த அரசியல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள், தீண்டாமைக்கு எதிரான இயக்கங்கள், பெண்களின் உரிமைகள் தொடர்பான இயக்கங்கள், சிறார்களின் உரிமைகள், சூழல் தொடர்பாக அக்கறையுள்ள அமைப்புகள் உருவாக வேண்டும்.
எனவே, இடதுசாரி கட்சிகள் வடக்கு, கிழக்கில் மீண்டும் தமது பணிகளை ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து நாடளாவிய அளவில் செயற்பட வேண்டும். உலகளாவிய மானிடம் பற்றிய விரிந்த பார்வை எமக்கு வேண்டும்.
தேசியவாத, குறுந் தேசியவாத சிந்தனைகளுடன் பத்தாம் பசலித்தனத்துடன் நத்தை ஓட்டுக்குள்ளும், ஆமை ஓட்டுக்குள்ளும் நாம் சீவிக்க முடியாது. எமது நாட்டின் சக மனிதர்களையும் உலக மனிதர்களையும் புரிந்து கொள்ள முனைவோம். ஐக்கியப்பட்டு வாழ முனைவோம்.
இத்தகைய விரிந்த யோசனைகளுடனான சமூக அரசியல் சக்திகளின் செயற்பாடு எமது சமூகத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் தற்போது அதிகமாகவே இருக்கின்றன.
மக்கள் மத்தியில் சுதந்திரமாக வேலைகளை முன்னெடுக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகியர்களா?
ஆம். வன்முறை கலாசாரத்தின் ஏக பிரதிநிதித்துவ சிந்தனையின் ஒரு பெரும் பாரிய பகுதி அழிவுற்று விட்டது. அது வரலாற்றின் தவிர்க்க முடியாத நிகழ்வு எனினும், வன்முறையின் ஏகபிரதிநிதித்துவ கருத்தியலின் பிரதி விம்பங்களான மனோபாவங்கள் எமது சமூகத்தில் காணப்படுகின்றன. இது முடிவுக்கு வரவேண்டும். இந்த விதமான அகங்காரங்களே சமூகத்தில பேரழிவுகளுக்கு வித்திட்டது. எனவே வௌ;வேறு சமூக அரசியல் கருத்துகளுடன் சுதந்திரமாக வேலை செய்வதற்கான சூழல் அடித்தளம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்திருக்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.
எவ்வாறான தீர்வு ஐக்கியப்பட்ட இலங்கையை கட்டியெழுப்ப உதவும்?
இலங்கையில் சிறுபான்மை மக்கள் தாம் இந்த நாட்டில் சமத்துவமாக நடத்தப்படுகிறோம். உள்ளூரில் எமது அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கருதும் அளவிற்கு நிலைமைகளை ஏற்படுத்துவதும் எவ்வளவுக்கு எவ்வளவு இலங்கையின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தப்படுகிறதோ, மக்களிடையே புரிந்துணர்விற்கான வழிவகைகள் செய்யப்படுகிறதோ, அப்போதே இதயபூர்வமான ஐக்கியம் சாத்தியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் ஒரு வானவில் போன்ற நிலைமை ஏற்படுத்தப்படுவது இங்கு அவசியமாகிறது.
– பி. வீரசிங்கம் (www.thinakaran.lk)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply