ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் : எச்.ராஜா கண்டனம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது, முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என சீமான் பேசியிருந்தார்.

சீமானின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதே வெறுப்புணர்வை மீண்டும் உருவாக்கக் கூடிய வகையில் யாரும் கருத்துக் கூற கூடாது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சீமான் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், “நம்முடைய தமிழ் மக்களையும் தமிழ் உணர்வுகளையும் தவறாக தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் ஒட்டுக்காக செயல்படுகின்ற சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் காவல்துறையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

சீமானை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கொடுத்த புகாரின்பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply