நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாத வகையில், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு: த.தே.கூ பிரதிநிதி என். ஸ்ரீகாந்தா

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாத வகையில், ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் தீர்வுத் திட்டங்களில் பங்களிப்பு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் காத்திரமான பங்களிப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்காக தீர்வு யோசனைகளை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஊடாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கப்பட வேண்டுமென முன்பு அரசாங்கத்தையும் புலிகளையும் தாம் வலியுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது, புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத வகையிலான தீர்வுத் திட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும், இதற்கு அந்தந்த பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஒத்துழைப்பையும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply