இந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை

கொல்கத்தாவின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷைரொஷர் கிராமத்தை சேர்ந்த 3 மூன்று மீனவர்கள் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள பத்மா ஆற்றில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் சர்வதேச எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 3 பேரையும் சிறைபிடித்தனர். 

பின்னர் அவர்களில் 2 பேரை மட்டும் விடுதலை செய்துவிட்டு இந்த தகவலை இந்திய படையினரிடம் தெரிவிக்கும்படி எச்சரித்து அனுப்பினர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக இந்திய எல்லை படையினரிடம் தகவல் அளித்தனர்.

இதையடுத்து வங்காளதேச படையினரால் கைது செய்யப்பட்ட மீனவரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 6 பேர் கொண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் படகு ஒன்றில் சென்று வங்காளதேச வீரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சென்றனர். 

ஆனால், ஆற்றின் நடுவே சர்வதேச எல்லையில் வங்காளதேச படையினர் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இந்திய வீரர்கள் சென்ற படகை சுற்றிவளைக்க முயன்றதால் பாதுகாப்பு படையினர் தங்கள் படகை திருப்பி மீண்டும் இந்திய எல்லைக்கு செல்ல முற்பட்டனர். 

அப்போது திடீரென வங்காளதேச படையை சேர்ந்த சையது என்ற வீரர் இந்திய பாதுகாப்பு படையினர் சென்ற படகை பின்னால் இருந்து குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இந்த திடீர் தாக்குதலில் படகில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் விஜய் பின் சிங்கின் தலை மீது குண்டு பாய்ந்து அவர் படகிலேயே உயிரிழந்தார். மற்றொரு இந்திய வீரர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது வங்காளதேச படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு அதில் இந்திய வீரர் உயிரிழந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வங்காளதேச எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய வீரர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரு நாட்டு எல்லை பாதுகாப்புப்படை தலைவர்கள் இன்று வங்காளதேச தலைநகர் டாக்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  

இந்தியா-வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினர் இடையேயான உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவறுதலாக நடந்த இந்த சம்பவம் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு படை தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது. எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான பிரச்சனையை கண்டறிந்து அதை இரு நட்பு நாடுகளும் அமைதி ரீதியில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

இதற்கிடையில், வங்காளதேச எல்லை பாதுகாப்புப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய படையினர் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் ஆகையால் தற்காப்புக்காகவே பதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளது.

 ஆனால் வங்காளதேச படையினரின் கூற்றை மறுத்துள்ள இந்திய எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி, இந்திய படையினர் துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. மாறாக வங்காளதேச வீரர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் நமது வீரர் உயிரிழந்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், வங்காளதேச வீரர்களால் கைது செய்யப்பட்ட மீனவர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply