தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கையை சு.க மூலம் அதிகரிப்பதே எனது இலக்கு: அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்
அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) காத்தான்குடிக்கு நேற்று முன்தினம் மாலை விஜயம் செய்தார். புலிகள் இயக்கத்திலிருந்து அவர் பிரிந்ததன் பின்னரும், அமைச்சரானதன் பின்னரும் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், அவரது மாகாண அமைச்சில் காத்தான்குடி காரியாலயத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பள்ளிவாயல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் முரளிதரன், பிரபாகரனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளினாலேயே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இந்த நிலைக்குச் சென்றுள்ளது. பல தடவைகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பேச்சின் மூலம் தீர்வைக் காண்போம் என நான் கூறிய போதெல்லாம் அவற்றை எல்லாம் அவர் உதாசீனம் செய்துவிட்டார். எனது கருத்துக்களை அவர் உள்வாங்கியிருந்தால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது உயிருடனும் இருந்திருப்பார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதனையுமே சாதிக்க முடியாது.
ஜனநாயக வழியில் தேசிய ரீதியில் ஆழுகின்ற அரசுகளுக்கு ஆதரவு வழங்கியதனாலேயே முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. 30 வருடங்களாக முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் தமது பிரதேசங்களை அபிவிருத்திச் செய்துள்ளனர். ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எதையுமே செய்ய முடியவில்லை. முஸ்லிம் தலைமைகளிடம் ஒற்றுமை உண்டு தனது சமூகத்திற்கு ஏதுமென்றால் ஒன்றாகி விடுவார்கள்.
ஆனால் தமிழ் தலைமைகள் அவ்வாறில்லை. 14 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ள தலைமைக்காக மோதுவதைத் தவிர எதையுமே ஆரோக்கியமாகச் செய்த வரலாறில்லை. ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் தலைமைகள் மோதுகின்ற அளவிற்கு வேற்றுமை மாத்திரமே மிஞ்சியிருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள். வெறும் பசப்பு வார்த்தை பேசிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிகின்றனர். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை ஆளும் கட்சியான சு.க. ஊடாக அதிகரிப்பதே எனது இலக்கு. கிழக்கில் மாத்திரமல்ல வடக்கிலும் ஆளும் கட்சியூடான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆதரிக்கவேண்டும்.
தமிழ், முஸ்லிம் சமூக வேற்றுமைகளை மறந்து, ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும். அதற்காகவே தேசிய நல்லிணக்க அமைச்சைப் பொறுப்பேற்றேன். யுத்தம் முடிந்துவிட்டது. இனி இனங்களிடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டும். அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அதாஉல்லா, அமீர்அலி, ரிஷாட் பதியுதீன் ஆகிய முஸ்லிம் அமைச்சர்களின் சேவைகளைப் பாராட்டுகின்றேன்.
வன்னியில் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு அங்கேயே நின்று ரிஷாட் அமைச்சர் அம்மக்களின் நலன் விடயங்களில் அக்கறைகாட்டி வருகின்றார். ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு அவர் அங்கு ஆற்றிவரும் சேவையானது வரவேற்கத்தக்கதாகும்.
அமைச்சர் ஹிஸ்புல்லாவும் தமிழ், முஸ்லிம் வேறுபாடில்லாமல் சேவையாற்றி வருகின்றார். இந்த நேரத்தில் அவர் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.அன்று நான் பிரபாகரனிடத்தில் அடிக்கடி கூறுவேன் முஸ்லிம்களை புறக்கணிக்காதீர்கள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசுங்கள் என்று, அதுதான் அவர் இறுதியில் முஸ்லிம் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த மாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply