யாருக்கு ஆதரவு? த.தே.கூ. பாராளுமன்ற குழு கூடுகிறது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது. அலரிமாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் த.தே.கூ பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டதாக அறிய வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது, 5கட்சிகளின் 13அம்சக் கோரிக்கை போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக நம்பகரமாக அறிய வருகிறது. இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த போதும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லையென த.தே.கூ உறுப்பினர் ஒருவர் கூறினார். மீண்டும் பிரதமரை சந்திக்கவும் இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று த.தே.கூ பாராளுமன்றக் குழு கூடவுள்ளதுடன் பிரதமருடனான சந்திப்பு குறித்தும் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மீண்டும் பிரதமரை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்த பின்னர் யாருக்கு ஆதரவு வழங்குவது என அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் அறிவித்திருந்தது.ஆனால், 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் பொதுஜன பெரமுன பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் நிலையில், அந்தக் கட்சியுடன் பேசுவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் த.தே.கூ இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில்,இவ்வார இறுதிக்குள் அதன் முடிவு வெளியாகுமென அறிய வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply